ஹோ ஷி மின்க் சிட்டி,
ஆசிய பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் மேரிகோம், ஷிக்ஷா, பிரியங்கா சவுத்ரி ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.
8-வது ஆசிய பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி வியட்நாமில் நடந்து வருகிறது. இதில் 5 முறை உலக சாம்பியனும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவருமான இந்திய வீராங்கனை மேரிகோம், 48 கிலோ உடல் எடைப்பிரிவில் கால்இறுதி சுற்றில் சீன தைபே வீராங்கனை மெங் ஷிக் பின்னை சந்தித்தார்.
34 வயதான மேரிகோம் முதல் 2 ரவுண்டுகளில் தற்காப்பில் அதிக கவனம் செலுத்தினார். கடைசி சுற்றில் அதிரடியாக தாக்குதலை தொடுத்த மேரிகோம், மெங் ஷிக் பின்னை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.
இதன் மூலம் ஆசிய போட்டியில் 6-வது முறையாக பதக்கம் வெல்வதை மேரிகோம் உறுதி செய்துள்ளார். ஏற்கனவே கடந்த 5 முறை ஆசிய போட்டிகளில் பங்கேற்றுள்ள மேரிகோம் 4 தடவை தங்கப்பதக்கமும், ஒருமுறை வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேரிகோம் அரைஇறுதியில் ஜப்பான் வீராங்கனை சுபாசா கோமுராவை எதிர்கொள்கிறார்.
54 கிலோ உடல் எடைப்பிரிவில் கால்இறுதியில் இந்தியன் ரெயில்வே வீராங்கனையான ஷிக்ஷா, உஸ்பெகிஸ்தான் வீராங்கனை பெரான்ஜிச் கோஷிமோவாவுடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே தாக்குதல் பாணியை கடைப்பிடித்த ஷிக்ஷா, பெரான்ஜிச்சை எளிதில் தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்ததுடன் பதக்கத்தையும் உறுதி செய்தார். தேசிய சாம்பியனான ஷிக்ஷா, அரைஇறுதியில் சீன தைபே வீராங்கனை லின் யு டிங்கை சந்திக்கிறார்.
60 கிலோ உடல் எடைப்பிரிவில் கால்இறுதியில் இந்திய வீராங்கனை பிரியங்கா சவுத்ரி, இலங்கை வீராங்கனை டுலான்ஜனி லங்காபுரயாலாஜேவை எதிர்கொண்டார். இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பிரியங்கா சவுத்ரி 5-0 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்து பதக்கத்தை உறுதிப்படுத்தினார்.
75 கிலோ உடல் எடைப்பிரிவில் கால்இறுதியில், உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான சாவீட்டி பூரா 0-5 என்ற கணக்கில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற சீன வீராங்கனை லி கியானிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.
பதக்கத்தை உறுதி செய்து இருக்கும் மேரிகோம் அளித்த பேட்டியில், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 6-வது பதக்கம் பெற இருப்பதை அற்புதமானதாக கருதுகிறேன். இது என்னை பொறுத்தமட்டில் எளிதான காரியம் அல்ல. கடவுளின் அருளால் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறேன். கடந்த ஒரு ஆண்டுகளுக்கு பிறகு நான் பெறும் முதல் பதக்கம் இதுவாகும். எம்.பி.ஆன பிறகு நான் பெறப் போகும் முதல் பதக்கம் இது. இந்த போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது நோக்கமாகும் என்று தெரிவித்தார்.