கோப்புப்படம் 
பிற விளையாட்டு

சர்வதேச டேபிள் டென்னிஸ்: சத்யன் - ஹர்மீத் தேசாய் ஜோடி அரையிறுதியில் தோல்வி

நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியாவின் சத்யன் - ஹர்மீத் தேசாய் ஜோடி, தென் கொரியாவின் லிம் ஜாங் ஹூன் - ஓ ஜுன்சங் ஜோடியுடன் மோதியது.

சென்னை,

உலக டேபிள் டென்னிஸ் ஸ்டார் கன்டென்டர் போட்டி சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சத்யன் - ஹர்மீத் தேசாய் ஜோடி, தென் கொரியாவின் லிம் ஜாங் ஹூன் - ஓ ஜுன்சங் ஜோடியுடன் மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சத்யன் - ஹர்மீத் தேசாய் ஜோடி 2-11, 3-11, 10-12 என்ற செட் கணக்கில் லிம் ஜாங் ஹூன் - ஓ ஜுன்சங் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சினேகித் சுரவஜ்ஜூலா சரிவில் இருந்து மீண்டு 9-11, 15-17, 11-4, 11-6, 18-16 என்ற செட் கணக்கில் ஜப்பானின் மிசுகி ஓகாவாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் மானவ் தாக்கர் 6-11, 7-11, 11-9, 9-11 என்ற செட் கணக்கில் செக்குடியரசின் லுபோமிர் ஜான்காரிக்கிடம் பணிந்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் யாஷினி சிவசங்கர், தனிஷ்கா கல்பாய்ராவ் தோல்வி கண்டு வெளியேறினர்.