புதுடெல்லி,
போலந்து ஓபன் மல்யுத்த போட்டியில் 53 கிலோ எடை பிரிவுக்கான இறுதியாட்டம் நேற்றிரவு நடந்தது. இதில், ஆசிய விளையாட்டு போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மல்யுத்த நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகட் மற்றும் உக்ரைன் நாட்டின் கிறிஸ்டினா பெரேசா ஆகியோர் விளையாடினர்.
இதில், 8-0 என்ற புள்ளி கணக்கில் பெரேசாவை வீழ்த்தி போகட் தங்க பதக்கம் வென்றுள்ளார். இதனால் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் முழு தகுதியுடன் தன்னை தயார்படுத்தி உள்ளார்.
கடந்த ஏப்ரலில் போகட் கூறும்பொழுது, 85 சதவீதம் அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளேன். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும்பொழுது, முழு அளவில் தகுதியுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என கூறினார்.
கடந்த மாதம், ஹங்கேரி மற்றும் போலந்து நாட்டில் போகட் பயிற்சி பெறுவதற்கான ஒப்புதலுக்கு மிஷன் ஒலிம்பிக் பிரிவு அனுமதி வழங்கியிருந்தது. இந்த பயிற்சி மற்றும் போட்டிக்கான ஒப்புதலுக்கான செலவு ரூ.20.21 லட்சம் ஆகும். இதுவரை போகட்டுக்கு ரூ.1.13 கோடி நிதியுதவி கிடைத்துள்ளது.