அபுதாபி ,
பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் தங்களது மின்னல் வேகத்தை காட்டுகிறார்கள். இதுவரை நடந்துள்ள 21 சுற்று முடிவில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி), நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) தலா 369.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இன்று இறுதி போட்டி நடைபெற்றது
இன்றைய போட்டியில் டாப்-10 இடத்திற்குள் வருபவர்களுக்கு மட்டுமே புள்ளி வழங்கப்படும். முதலாவது வந்தால் 25 புள்ளி, 2-வது வந்தால் 18 புள்ளி, 3-வது இடத்துக்கு 15 புள்ளி வீதம் வழங்கப்படும்.
இந்த நிலையில் இவர்களில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 22-வது மற்றும் கடைசி சுற்றான அபுதாபி கிராண்ட்பிரி அங்குள்ள யாஸ் ஓடுதளத்தில் இன்று மாலை தொடங்கியது.
நேற்று நடந்த தகுதி சுற்றில் வெர்ஸ்டப்பென் முதலிடம் பிடித்ததால் இன்றைய ரேசில் வெர்ஸ்டப்பென் கார் முதல்வரிசையில் இருந்து புறப்பட்டது. ஹாமில்டனின் கார் 2-வது வரிசையில் இருந்து சீறியது. போட்டியின் ஆரம்பம் முதலே சீறி பாய்ந்தார் வெர்ஸ்டப்பென்.
இறுதியில் மெர்சிடஸ் அணியின் ஹாமில்டனை பின்னுக்குத் தள்ளி ரெட்புல் அணியின் வெர்ஸ்டப்பென் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். இது அவரது முதல் பார்முலா1 சாம்பியன் பட்டமாகும்.