மும்பை,
நாசிக் பகுதியில் இருந்து புல்தானா மாவட்டம் காம்காவுக்கு மாநில அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் ஒன்று நேற்று அதிகாலை புறப்பட்டது. அதிகாலை 5.45 மணி அளவில் நாசிக்கை அடுத்த கல்வான் தாலுகா சப்தசுருங்கி கார்க் மலைப்பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர தடுப்பு சுவரை உடைத்து கொண்டு 150 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இந்த பயங்கர விபத்தில் பெண் பயணி பலியானார். மேலும் 22 பயணிகள் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு நாசிக் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மழையால் சாலை சேறும், சகதியுமாக காணப்பட்டு உள்ளது. மேலும் பனிமூட்டம் போல இருந்ததால் டிரைவருக்கு தெளிவான பார்வை கிடைக்கவில்லை. இதன் காரணமாக விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக பஸ் பள்ளத்தாக்கில் பாய்ந்தபோது பாதி வழியில் புதர்கள் மற்றும் சகதியில் சிக்கி அந்தர் பல்டி அடிக்காமல் நின்று விட்டது. மேலும் முன்னேறி சென்றிருந்தால் உயிரிழப்பு அதிகமாகி நிலைமை மோசமாகி இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.