மும்பை,
கிரிக்கெட் வீரர் விராட்கோலி மகளுக்கு பலாத்கார மிரட்டல் விடுத்தவர் மீதான வழக்கை ரத்து செய்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பலாத்கார மிரட்டல்
2021-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த 'டி20' உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததை தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் விராட் கோலி- நடிகை அனுஷ்கா சர்மா தம்பதியின் மகளான சிறுமிக்கு சமூக வலைத்தளத்தில் ஒருவர் பாலியல் பலாத்கார மிரட்டலை பதிவிட்டு இருந்தார். இதுதொடர்பாக மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி ஐதராபாத்தை சேர்ந்த ராம்நாகேஷ் அகுபதினி என்ற வாலிபரை கைது செய்தனர்.
அவர் ஐதராபாத் ஐ.ஐ.டி.யில் படித்து முடித்த பட்டதாரி என்பது தெரியவந்தது. 9 நாட்களுக்கு பிறகு அவருக்கு மும்பை கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
வழக்கில் இருந்து விடுவிப்பு
இந்தநிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ராம்நாகேஷ் அகுபதினி மும்பை ஐகோர்ட்டில் மனு செய்தார். அதில் அவர், நான் ஜே.இ.இ. தேர்வில் 'ரேங்க்' பெற்ற மாணவர் என்றும், வெளிநாடு வேலைக்கு செல்ல தனது மீதான வழக்கு தடையாக இருப்பதாகவும் கூறியிருந்தார். எனவே தனது மீதான வழக்கை ரத்து செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு இருந்தார்.
மேலும் பட்டதாரி மாணவர் மீதான வழக்கை ரத்து செய்யவதற்காக விராட்கோலியின் மேலாளர் டிசோசா ஒப்புதல் பிரமாண பத்திரத்தை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட ராம்நாகேஷ் அகுபதினியை வழக்கில் இருந்து விடுவித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.