சென்னை,
தமிழகத்தில் 17-வது சட்டசபையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதியும் இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்பட இருக்கிறது.
சட்டசபை தேர்தலில் இந்த முறை 4 முனைப்போட்டி நிலவும் என்பது உறுதியாகி இருக்கிறது. அதாவது, தி.மு.க. தலைமையில் ஒரு அணி, அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு அணி, நடிகர் விஜய்யின் த.வெ.க. மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்து என களம்காண இருக்கின்றன.
இந்த 4 முனைப்போட்டியை 3 முனைப்போட்டியாக்கும் முயற்சிகள் இடையில் நடந்தன. அதாவது, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் நடிகர் விஜய்யின் த.வெ.க.வையும் கொண்டுவர பேச்சு வார்த்தை மும்முரமாக நடந்தது. ஆனால், அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.
நடிகர் விஜயகாந்த் தே.மு.தி.க.வை தொடங்கிய பிறகு, முதல் முறையாக 2006 சட்டசபை தேர்தலை தனித்து எதிர்கொண்டார். 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கினாலும், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார். என்றாலும், 8.3 சதவீத வாக்குகளை தே.மு.தி.க. பெற்றது.
2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டு, வாக்கு வங்கியை 10.1 சதவீதமாக உயர்த்தியது. 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று, 41 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி என்ற அந்தஸ்துக்கும் உயர்ந்தது. ஆனால், வாக்கு சதவீதம் 7.9 ஆக குறைந்து போனது.
அதன்பிறகு, தே.மு.தி.க. களம் கண்ட அத்தனை தேர்தல்களிலும் வாக்கு வங்கி சரியத் தொடங்கி, தற்போது ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இந்த நிலையில், வரும் தேர்தலில் அக்கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.
2006-ம் ஆண்டு தனித்து போட்டி என்று விஜயகாந்த் எடுத்த முடிவைத்தான், 2026 தேர்தலில் நடிகர் விஜய்யும் தற்போது எடுத்திருக்கிறார். விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சியின் முதல் மாநாட்டிலேயே, முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டபோதும், கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்குதரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், விஜய்யை தலைமை ஏற்று, எந்தக் கட்சியும் த.வெ.க. கூட்டணியில் இணைய வரவில்லை என்றாலும், விஜய்யை தங்களுடைய கூட்டணி வளையத்துக்குள் கொண்டுவர அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி முடிவு செய்து காய்களை நகர்த்திவந்தன.
ஆனால், அவர்கள் தரப்பில் த.வெ.க.வுக்கு 60 தொகுதிகளும், துணை முதல்-அமைச்சர் பதவியும் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், அதை ஏற்க மறுத்த த.வெ.க., தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால், முதல் 2½ ஆண்டுகள் விஜய்தான் முதல்-அமைச்சர் என்று கூறியதாகவும் தகவல் வெளியானது.
இதனால், அதிர்ந்துபோன அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமி, 'அப்படியொரு கூட்டணியே வேண்டாம்' என்று மறுத்துவிட்டாராம்.
அதே நேரத்தில், த.வெ.க. தேர்தல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கிய சாமி, த.வெ.க. தனித்து போட்டியிட்டாலே வெற்றி பெறும் என்று ஆரம்பம் முதலே கூறிவந்தாராம். கடைசியில், வரும் சட்டசபை தேர்தலை த.வெ.க. தனித்தே சந்திப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளது.
இதை, நேற்றைய த.வெ.க. ஆர்ப்பாட்டத்தின்போதே நிர்வாகிகள் கே.ஏ.செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் உறுதிப்படுத்தினார்கள். இதன் மூலம், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி என்பது உறுதியாகி இருக்கிறது.
தற்போது வரை, த.வெ.க.வில் 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 174 தொகுதிகளுக்கும் விரைவில் வேட்பாளர் தேர்வு நடைபெற இருக்கிறது.
த.வெ.க. தலைவரும், முதல்-அமைச்சர் வேட்பாளருமான நடிகர் விஜய், தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இனி, த.வெ.க.வுக்கு மக்கள் செல்வாக்கு எப்படி? என்பதை தேர்தல் முடிவு சொல்லிவிடும்.