மும்பை,
மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றம் விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர் நேற்று மும்பை வந்தார். அவர் தாதர் பா.ஜனதா அலுவலகத்தில் நடந்த தென்மத்திய மும்பை நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் மும்பை பா.ஜனதா தலைவர் ஆஷிஸ் செலார், கேப்டன் தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அங்கு நடந்த நிகழ்ச்சியில் ருமேனியாவில் நடந்த சர்வதேச அளவிலான பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழ் வாலிபர் வெங்கடேஷ் மற்றும் பல்வேறு சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களை மந்திரி அனுராக் தாக்குர் பாராட்டினார். சர்வதேச பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்ற தமிழ் வாலிபர் வெங்கடேஷ் மும்பை பவாய் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் சயான் கோலிவாடாவில் உள்ள கேப்டன் தமிழ் செல்வன் எம்.எல்.ஏ.வின் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்றவர். அவரின் ஏற்பாட்டில் தான் வெங்கடேஷ் வௌநாட்டில் நடந்த போட்டியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.