நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் தங்கத்தின் தேவை 10 சதவீதம் அதிகரிப்பு

இந்திய தங்க சந்தையில் அளவு மற்றும் மதிப்பு வளர்ச்சியில் வேறுபாடு காணப்படுகிறது.
நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் தங்கத்தின் தேவை 10 சதவீதம் அதிகரிப்பு
Published on

புதுடெல்லி,

நடப்பு ஆண்டு ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியாவின் மொத்த தங்கத் தேவை 151 டன்னாக அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகமாகும். இதுகுறித்தான தகவலை உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ளது.

அதன்படி முதலீட்டை அடிப்படையாக கொண்ட வாங்குதல் அதிகரித்து, தங்க கட்டிகள், நாணயங்கள் மற்றும் ஈ.டி.எப்-கள் மூலம் முதலீட்டு தேவை 54 சதவீதம் உயர்ந்து 82 டன்னாகியுள்ளது. விலை உயர்வு காரணமாக ஆபரண தங்கத்தின் தேவை சரிந்தாலும் முதலீடு அடிப்படையில் தேவை உயர்ந்தது.

ஆபரண தங்க விலை அதிகரிப்பும், வாங்கும் திறன் குறைபாடும் காரணமாக நகைத் தேவை 19 சதவீதம் குறைந்து 67 டன்னாக சரிந்துள்ளது. முழு ஆண்டுக்கான (2026) தங்கத் தேவை 750 டன்னுக்குள் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பதிவான 712 டன்னுடன் ஒப்பீடும்போது 38 டன் அதிகமாகும்.

2025-ம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த தங்கத் தேவை 137 டன்னாக இருந்தது. மதிப்பின் அடிப்படையில், 2026 மார்ச் காலாண்டில் தங்கத் தேவை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 99 சதவீதம் உயர்ந்து ரூ.2 லட்சத்து 27 ஆயிரத்து 500 கோடி (25 பில்லியன் அமெரிக்க டாலர்) என்ற சாதனை அளவை எட்டியுள்ளது.

இதுகுறித்து உலக தங்க கவுன்சிலின் இந்திய பிராந்தியத்துக்கான தலைமை அதிகாரி சச்சின் ஜெயின் கூறுகையில், "2026 முதல் காலாண்டில் இந்திய தங்க சந்தையில் அளவு மற்றும் மதிப்பு வளர்ச்சியில் வேறுபாடு காணப்படுகிறது. இது அதிகபட்ச தங்க விலையும், மாறும் நுகர்வோர் விருப்பங்களும் காரணமாக உருவானது. மொத்த தேவை 151 டன்னாக 10 சதவீ தம் உயர்ந்தது.

ஆபரண தங்கம் தேவை அளவில் 19 சதவீதம் குறைந்து 67 டன்னாக இருந்தாலும், மதிப்பில் அது 47 சதவீதம் உயர்ந்து ரூ.9 ஆயிரத்து 900 கோடியாக உள்ளது (கடந்த ஆண்டு ரூ.68 ஆயிரத்து 100 கோடி)" என்றார். தங்க கட்டி மற்றும் நாணயங்களுக்கான தேவை 34 சதவீதம் உயர்ந்து 63 டன்னாகியுள்ளது. இது 2013-க்கு பிறகு முதல் காலாண்டில் காணப்பட்ட மிக உயர்ந்த அளவாகும். மதிப்பில் இது 142 சதவீதம் உயர்ந்து ரூ.94,100 கோடியாகியுள்ளது.

இதனால் பாரம்பரியமாக நகை ஆதிக்கம் செலுத்திய சந்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தங்க ஈ.டி.எப்-களில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் ஈடுபட்டதால், ரூ.31 ஆயிரத்து 600 கோடி மதிப்புடன் 21 டன் நிகர முதலீடு பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com