

சென்னை,
தங்கம் விலை கடந்த 10-ந்தேதியில் இருந்து மளமளவென சரிந்து வருவதை பார்க்க முடிகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் உச்சம் தொட்டிருந்த நிலையில், அதற்கு பிறகு ஏற்ற-இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது.
தொடர்ந்து விலை குறைந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வரும் என கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இருந்து பேசப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் விலை குறையும் என பல நிபுணர்களால் அவ்வப்போது சொல்லப்பட்டு கொண்டே இருந்தது. அந்த வகையில் இந்த மாதம் தொடக்கத்தில் விலை ஏற்ற-இறக்கத்துடன் பயணத்தை தொடங்கினாலும், கடந்த 10-ந்தேதியில் இருந்து தங்கம் விலையில் தொடர்ந்து இறங்குமுகமே காணப்படுகிறது.
அப்படியாக கடந்த 18-ந்தேதி முதல் பெருமளவில் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 18-ந்தேதி சவரனுக்கு ரூ.2,040-ம், நேற்று முன்தினம் ரூ.1,880-ம் குறைந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலையில் அதிரடி சரிவு காணப்பட்டது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.3,760-ம், கிராமுக்கு ரூ.470-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.92,080-க்கும், ஒரு கிராம் ரூ.11,510-க்கும் விற்பனையானது.
தங்கம் விலையை பொறுத்தவரையில் பொதுவாக ஏறும்போதுதான் அதிரடியாக ஒரே நாளில் அதிகரிக்கும். ஆனால் நேற்று ஒரே நாளில் ரூ.3,760 சரிவு என்பது இதுவரை இல்லாத ஒரே நாளில் குறைந்த விலை இறக்கமாகும். இதற்கு முன்பு அதிகபட்சமாக ஒரே நாளில் ரூ.2,500 வரை குறைந்ததே அதிகபட்ச ஒரு நாள் குறைவாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.91,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,465-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10-ந்தேதியில் இருந்து இன்று வரையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,790-ம், சவரனுக்கு ரூ.14,320-ம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.175-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பால், அமெரிக்க டாலர் மதிப்பு வலுவடைகிறது. இதனால் முதலீட்டாளர்கள் வட்டி தராத தங்கத்தை விற்கும் முனைப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். இதன் காரணமாகவே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் விலை குறைவதற்கான சூழலே இருப்பதாக சொல்லப்படுகிறது.