

தங்கத்தின் விலை கடந்த 2 ஆண்டுகளாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த ஆண்டில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.45 ஆயிரம் வரை உயர்ந்தது. அதிகபட்சமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி பவுன் ரூ.1,00,120-க்கு விற்றது. அதன்பின் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் 1-ந்தேதி கிராம் ரூ.12 ஆயிரத்து 440-க்கும், பவுன் ரூ.99 ஆயிரத்து 520-ம் ஆக இருந்தது. அதன்பின் அதே மாதத்தில் 29-ந்தேதி தங்கம் கிராம் ரூ.16 ஆயிரத்து 800-க்கும், பவுன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. இதுதான் இந்த ஆண்டின் அதிகபட்ச விலையாகும். இதில் இருந்து தங்கத்தின் விலை இறக்கமும், ஏற்றமுமாக இருந்து வந்தது.
தங்கத்தின் விலை குறையுமா? என மக்கள் எதிர்பார்த்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவு ஜனாதிபதி டிரம்புக்கு எதிராக அமைந்த பின் தங்கத்தின் விலை சற்று குறைந்தது. அதன்பிறகு கடந்த ஒரு வார காலமாக தங்கத்தின் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் தங்கத்தின் விலை நேற்று மேலும் குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.70-ம், பவு னுக்கு ரூ.560-ம் குறைந்தது. அதன்படி ஒரு கிராம் ரூ.12 ஆயி ரத்து 470-க்கும், பவுன் ரூ.99 ஆயிரத்து 760-க்கும் விற்றது. ஆபரண தங்கத்தின் விலை பவுன் விலை ரூ.1 லட்சத்துக்கும் கீழ் கடந்த 11 மாதங்களுக்கு பிறகு குறைந்துள்ளது. உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை குறைந்ததால் நகைப்பிரியர்கள், இல்லத்தரசிகள், பெண்கள், நடுத்தர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி, இன்று கிராமுக்கு ரூ.255-ம், பவுனுக்கு ரூ.2,040-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 215-க்கும், ஒரு பவுன் ரூ.97 ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போல வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5,000-ம் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.185-க்கும் ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. சென்னையில் கடந்த 13 நாட்களில் தங்கம் பவுனுக்கு ரூ.9,360 சரிந்துள்ளது. இன்று மட்டும் பவுனுக்கு ரூ.2,040 குறைந்து, நடப்பாண்டின் மிகக்குறைந்த விலையாக ரூ.97,720க்கு விற்பனையாகி வருகிறது.
அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவு, அமெரிக்காவில் பண வீக்கம் அதிகரிப்பு, அந்நாட்டில் முதலீடு பத்திரங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு, டாலர் மதிப்பின் உயர்வு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவதாக நகைக்கடை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். திருமணம், சுபகாரியங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தங்கம் வாங்குபவர்கள் வாங்கி வருகின்றனர்.
ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்த நிலையில் அதன் விற்பனை சற்று அதிகரித்துள்ளது. நகைகளாகவும். தங்க நாணயங்களாகவும் தங்களின் தேவைக்கு ஏற்ப பொதுமக்கள் பலர் வாங்கிகொள்கின்றனர். இதனால் கடந்த ஓரிரு தினங்களாக சென்னையில் தங்கத்தின் விற்பனை 15 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக நகைக்கடை வட்டாரத்தில் தெரிவித்தனர்.