

சென்னை,
தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2-வது முறையாக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற பேச்சு எழுந்ததில் இருந்து தங்கம் விலை சரிவை சந்தித்தது. கடந்த 10-ந்தேதியில் இருந்து விலை மளமளவென குறைந்து வந்ததை பார்க்க முடிந்தது.
அந்த வகையில் 10-ந்தேதியில் இருந்து கடந்த 21-ந்தேதி வரை விலை குறைந்து வந்தது. இந்த இடைப்பட்ட நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.1,490-ம், சவரனுக்கு ரூ.11,920-ம் குறைந்திருந்தது. அதன் பின்னர், 23, 24-ந்தேதிகளில் விலை உயர்ந்து, 25-ந்தேதி மீண்டும் குறைந்தது. மேலும் குறையும் என எதிர்பார்த்த சூழலில், நேற்று விலை உயர்ந்தது.
இதன் தொடர்ச்சியாக இன்றும் காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480-ம், கிராமுக்கு ரூ.60-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.92,800-க்கும், ஒரு கிராம் ரூ.11,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2-வது முறையாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலையில் சவரனுக்கு ரூ.1,360 அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.94,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.170 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று காலையில் கிராமுக்கு ரூ.5 உயர்ந்தது. மாலையில் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.170-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.