

சென்னை,
தங்கம் விலையில் ஏற்ற-இறக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த 12-ந்தேதி சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்திருந்த நிலையில், அதற்கு மறுநாள் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால் மீண்டும் விலை அதிகரித்து காணப்பட்டது. அன்றைய நாளில் கிராமுக்கு ரூ.670-ம், சவரனுக்கு ரூ.5,360-ம் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,20,000 தொட்டது.
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினமும் சவரனுக்கு ரூ.400 அதிகரித்தது. மேலும் விலை உயருமோ? என நினைத்திருந்த நேரத்தில் நேற்று திடீரென்று விலை குறைந்தது. நேற்று காலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்திருந்த சூழலில், பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.185-ம், சவரனுக்கு ரூ.1,480-ம் குறைந்தது.
ஆக மொத்தம் நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.285-ம், சவரனுக்கு ரூ.2,280-ம் சரிந்து ஒரு கிராம் ரூ.14,765-க்கும், ஒரு சவரன் ரூ.1,18,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு பலமடைந்துள்ளது. பொதுவாக அமெரிக்க டாலர் மதிப்பு வலுவாகும்போது தங்கம் விலை குறையும். ஏனென்றால் டாலரில் தங்கம் வாங்குவது மற்ற நாட்டு முதலீட்டாளர்களுக்கு செலவு மிகுந்ததாக இருக்கும். எனவே தங்கம் விலை சரிந்துள்ளது. மேலும் அமெரிக்காவில் பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதால், அங்கு வட்டி விகிதங்கள் குறைக்கப்படாது என்றும், மேலும் உயர்த்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் வங்கி முதலீடுகள் மற்றும் பத்திரங்கள் பக்கம் திரும்பியுள்ளனர். இதுவும் ஒரு காரணமாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,18,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15-ம், கிலோவுக்கு ரூ.15 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.