அட்சய திருதியையொட்டி நகைக்கடைகளில் அலைமோதிய கூட்டம்.. இத்தனை கிலோ தங்கம் விற்பனையா..?

அட்சய திருதியையொட்டி, கடந்த இரு நாட்களாக நகை கடைகளில் கூட்டம் அலைமோதியது.
அட்சய திருதியையொட்டி நகைக்கடைகளில் அலைமோதிய கூட்டம்.. இத்தனை கிலோ தங்கம் விற்பனையா..?
Published on

சென்னை,

செல்வத்தை அள்ளி குவிப்பதுடன், முடிவில்லாத, அள்ள அள்ள குறையாத என்று பொருள்படும் அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி, நகைகள் போன்ற விலை உயர்ந்த பொருட்கள், ஆபரணங்கள் வாங்குவதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அந்தவகையில், அட்சய திருதியை நேற்று முன் தினம் காலை தொடங்கி நேற்று (திங்கட்கிழமை) காலை வரை இருந்தது.

இதனால், சென்னையில் தியாகராயநகர், புரசைவாக்கம், அண்ணாசாலை, பாரிமுனை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் பெண்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த இரு மாதங்களுக்கு முன் விற்கப்பட்ட விலையை விட இந்த மாதம் 22 காரட் ஆபரண தங்கம் சவரனுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை குறைந்துள்ளது.

நேற்று தங்கம் கிராம் 14,300 ரூபாய்க்கும், சவரன் 1,14,400 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. சட்டமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இரு தினங்களே உள்ளதால், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க, வாகன சோதனையை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

1 பவுன் வாங்குவதாக இருந்தாலும் லட்சத்திற்கு மேல் பணம் கையில் கொண்டு செல்ல வேண்டும். ஆனால் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை வேறு அமலில் இருப்பதால் ரொக்கப்பணம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விடுவார்களோ? என்று இல்லத்தரசிகள் ஒருவித அச்சத்திலேயே நகைக்கடைகளுக்கு சென்று திரும்பியதை காணமுடிந்தது.

இருப்பினும், இந்த அட்சய திருதியையில், கடந்த இரு நாட்களாக தமிழக நகை கடைகளில், 25 ஆயிரம் கிலோ தங்க நகைகள் விற்பனையாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, 1 கிலோ தங்கம் 1.50 கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனவே, 25 ஆயிரம் கிலோ தங்க நகைகளின் மதிப்பு, 37,500 கோடி ரூபாயாக உள்ளது.

கடந்த அட்சய திருதியைக்கு, கிலோ தங்கம் விலை 98 லட்சம் ரூபாயாக இருந்தது. அந்த ஆண்டில் விற்ற 25 ஆயிரம் கிலோ தங்க நகைகளின் மதிப்பு, 24,500 கோடி ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டும் ஒரே அளவில் தங்கம் விற்பனையாகி இருந்தாலும், மதிப்பின் அடிப்படையில், கடந்த ஆண்டை விட கூடுதலாக, 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த இரு நாட்களாக, 25 ஆயிரம் கிலோ தங்க நகைகள் விற்பனையாகி உள்ளநிலையில் இது மதிப்பின் அடிப்படையில் 40,000 கோடி ரூபாயை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com