

சென்னை,
தங்கம், வெள்ளி விலை தினமும் புதிய உச்சம் என்ற பாணியை கையில் எடுத்துவிட்டது. விலை உயர்ந்தாலே உச்சம் என்ற போக்கிலேயே ‘கிடுகிடு'வென அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. ஆண்டின் முதல் மாதமான இம்மாத தொடக்கத்தில் ஒரு கிராம் ரூ.12,440-க்கும், ஒரு சவரன் ரூ.99,520-க்கும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. அதன்பின்னர், தங்கம் விலை ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கியது.
அதிலும் கடந்த 12-ந்தேதிக்கு பிறகு தங்கம் விலையின் வேகம் யாரும் எதிர்பாராத வகையில் இருந்தது. சில நாட்கள் தங்கம் விலை உயர்வு நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,190-ம், சவரனுக்கு ரூ.9,520-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.16,800-க்கும், ஒரு சவரன் ரூ.1,34,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று காலையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதன்படி கிராமுக்கு ரூ.600-ம், சவரனுக்கு ரூ.4,800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.16,200-க்கும், ஒரு சவரன் ரூ.1,29,600-க்கும் விற்பனையாகி சற்று ஆறுதல் அளித்தது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2-வது முறையாக தங்கம் விலை குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பிற்பகலில் சவரனுக்கு ரூ.2,800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,26,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.350 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.7,600 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலையைப் போல வெள்ளி விலையும், பிற்பகலில் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை பிற்பகலில் கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.405-க்கும், ஒரு கிலோ ரூ.4,05,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.