“ஆனந்தம்” படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு

43 அறிமுக இயக்குனர்களில் ஒருவராக தன்னை தேர்ந்தெடுத்த ஆர்.பி.சௌத்ரி அவர்களுக்கு நன்றி தெரிவித்து இயக்குநர் லிங்குசாமி பதிவிட்டுள்ளார்.
“ஆனந்தம்” படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு
Published on

இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி, இயக்குநராக அறிமுகமான ‘ஆனந்தம்’ படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2001ம் ஆண்டின் மே மாதம் 25ம் தேதி அன்று ‘ஆனந்தம்’ வெளியானது.

சூப்பர் குட் ஆர்.பி.சௌத்ரியின் தயாரிப்பில் மம்முட்டி, முரளி, அப்பாஸ், ரம்பா, தேவயானி, சினேகா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தோடு அழகான குடும்பக் கதையாக ‘ஆனந்தம்’ வெளியாகி இருந்தது. அண்ணன் தம்பிகளுக்கு இடையில் இருக்கும் பாசம், வீட்டிற்கு வரும் மருமகள்களால் நடக்கும் பிரச்னை என அந்த ஒரு குடும்பத்தைச் சுற்றி நடந்த கதை. எஸ்ஏ ராஜ்குமார் இசையில், 'ஆசை ஆசையாய் இருக்கிறதே, பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன், என்ன இதுவோ,' ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்களாக அப்போது அமைந்தன.

‘ஆனந்தம்’ படம் குறித்து லிங்குசாமி “தமிழ் சினிமாவுக்கு 43 கலைஞர்களை அறிமுகப்படுத்தின ஆர்.பி.சௌத்ரி என்கிற மகா கலைஞன்தான் என்னையும் அறிமுகம் செய்து வைத்தார். என்னுடைய வாழ்க்கையில் எனக்கு கிடைத்த புகழ், சந்தோஷம், வாழும் வாழ்க்கை, என்னோட சாப்பாடு எல்லாத்தையும் அந்த மகா குருவுக்குத்தான் அர்ப்பணிக்கறேன். அவர்கிட்ட கதை சொல்லப்போன சந்திப்பில் இருந்து அதன் பிறகு அவருக்கும் எனக்குமான எல்லா நினைவுகளையும் பொக்கிஷமாக ஞாபகம் வச்சுக்குவேன். ‘ஆனந்தம்’ கதையைச் சொல்லி முடிச்சதும் அவர் என்கிட்ட 'இந்தக் கதையை எத்தனை நாள்கள்ல எடுப்பீங்க?'னு கேட்டார். நான் 60 நாட்கள்ல முடிச்சிடுவேன் என்று சொன்னேன். 60 நாள்களுக்குள் படத்தை நான் முடிக்காததால் சௌத்ரி சார் கோபமாகிட்டார்.

‘படம் ரொம்ப நல்லா வந்திருக்குது. நம்புங்க சார். நீங்க இதை என்னை வச்சு எடுக்க விரும்பலைனா, இந்தக் கதையை நான் தொடவே மாட்டேன்’ என்று சொன்னதும், என்னைச் சமாதானப்படுத்தினார்.‘இன்னும் எத்தனை நாட்கள் ஆகும்?’ என்று கேட்ட அந்த ஒரு நாளை என் வாழ்க்கையில் முக்கியமான நாளாகக் கருதுறேன். நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவோ தவறுகள், சரிகள் நடக்கலாம். ஆனா, முழு மனசோடு போய் ஒருத்தரை நேர்ல சந்திச்சு அதன் காரணங்களைச் சொல்லும் போது பிரச்னைகள் பஞ்சா பறந்துடும். உண்மை என் பக்கம் இருக்கும்போது யார்கிட்ட வேணா நான் நேரிடையாகப் போய் பேசிடுவேன். இதுவரைக்கும் நான் அப்படித்தான் இருந்திருக்கேன்” என்றார் லிங்குசாமி.

43 அறிமுக இயக்குனர்களில் ஒருவராக தன்னை தேர்ந்தெடுத்த ஆர்.பி.சௌத்ரி அவர்களுக்கு நன்றி தெரிவித்து இயக்குநர் லிங்குசாமி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com