

சென்னை,
'அவள் பெயர் தமிழரசி', 'விழித்திரு' படங்களை இயக்கியவர் மீரா கதிரவன். இவர் இப்போது ‘ஹபீபி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இஸ்லாமிய குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இயக்குனர் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், ஈஷா எம்,மாளவிகா மனோஜ்,தனஸ்ரீ, சுதாகரன், அனுஸ்ரீயா ராஜன், இஸ்மத் பானுரேகா உள்ளிட்டோரும் இதில் நடித்துள்ளனர். நேசம் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்.
கடையநல்லூரில் வாழும் தமிழ் முஸ்லீம்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும், தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகருமான தனுஷ் ‘ஹபீபி’ படக்குழுவிற்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ‘ஹபீபி’ படத்தை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “ஹபீபி படத்தில், தான் அறிந்திடாத முற்றிலும் புதிய உலகத்திற்குள் நுழைந்து ‘யூசுப்’ கேரக்டராகவே முழுமையாக வாழ்ந்திருக்கும் என் அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன். அப்பாவிடமிருந்தும் மற்ற நடிகர்கள் அனைவரிடமிருந்தும் மிகச்சிறப்பான நடிப்பை வாங்கியதோடு மிக சிறந்த திரைப்பட அனுபவத்தைத் தந்திருக்கும் இயக்குநர் மீரா கதிரவன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.