

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ஸ்ரீலீலா, அசுர வேக ஆட்டக்காரரும் ஆவார். சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘பராசக்தி’ படத்தில் நடித்து தமிழ் சினிமாவிலும் 'என்ட்ரி' கொடுத்தார். தற்போது தனுஷின் 55வது படத்தில் நடித்து வருகிறார். ‘புஷ்பா 2’ படத்தில் ஸ்ரீலீலா நடனமாடியதன் மூலம் பெரிய ரீச் கிடைத்தது. கன்னடத்தில் இருந்து தன்னுடைய சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய நடிகை ஸ்ரீலீலா, தெலுங்கு சினிமாவில் ராஷ்மிகாவின் இடத்தை கைப்பற்றி இருக்கிறார். தெலுங்கில் தற்போது அவரது கைவசம் நிறைய படங்கள் இருக்கின்றன. அத்தனைப் படங்களும் தெலுங்கு சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்களின் படங்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் பிறந்த இந்தியரான ஸ்ரீலீலா, வளர்ந்தது, படித்தது எல்லாம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்தான்.
ஸ்ரீலீலாவின் முதல் படமான 'கிஸ்' திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படம் வெளியானபோது, அவரது வயது 19 தான். முதல் படமே 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியை அளித்தது. இதையடுத்து அவருக்கு கன்னடத்தில் வாய்ப்புகள் வந்தன. மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் ஜோடியாக 'ஜேம்ஸ்' என்ற படத்திலும் நடித்திருந்தார். இதற்கிடையில் 2021-ம் ஆண்டு 'பெல்லி சான்டட்' என்ற படத்தின் மூலமாக தெலுங்கில் அறிமுகமானார் ஸ்ரீலீலா. இரண்டாவது படமே, தெலுங்கின் முன்னணி நடிகரான ரவிதேஜாவுடன் ஒப்பந்தமானது. 'தமாகா ' படத்தில் நடித்து கவனம் பெற்றவருக்கு அப்படத்தில் இடம்பெற்ற பல்சர் பாடல் பிரபலமாக்கியது.
பவன்கல்யாண், நந்தமுரி பால கிருஷ்ணா, விஜய் தேவரகொண்டா ஆகியோர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ‘குண்டூர் காரம்’ படத்தில் ‘குர்ச்சி மாடதபெட்டி’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கிறங்கடித்தார்.
நடிகர் தனுஷ், ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55 படத்தில் நடித்துவருகிறார். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆகே டேக்ஸ்டியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘தனுஷ் 55’ என்ற டைட்டில் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளது. இதில் நாயகியான நடிகை ஸ்ரீ லீலா, சாய் பல்லவி நடித்து வருகின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், ‘டி55’ படக்குழு ஸ்ரீலீலா பிறந்த நாளையொட்டி புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.