"ஏஜென்ட் டினாதான் என் ஆக்‌ஷன் இன்ஸ்பிரேஷன்"- நடிகை பிரீத்தி முகுந்தன்

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க விரும்புகிறேன் என பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார்.
"ஏஜென்ட் டினாதான் என் ஆக்‌ஷன் இன்ஸ்பிரேஷன்"- நடிகை பிரீத்தி முகுந்தன்
Published on

‘ஸ்டார்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே கவனம் பெற்ற நடிகை பிரீத்தி முகுந்தன், தற்போது தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். முதல் படத்திலேயே கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘நாக்ஜில்லா’, ‘கண்ணப்பா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

அவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘பிளாஸ்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவான இந்தப் படத்தில் பிரீத்தி முகுந்தன் சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடித்திருப்பது பாராட்டுகளை பெற்று வருகிறது.

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம்

சமீபத்திய பேட்டியில் தனது திரைப்பயணம் குறித்து பேசிய பிரீத்தி முகுந்தன், “ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க விரும்புகிறேன். தென்னிந்திய மொழிப் படங்களுடன், இந்தி திரைப்படங்களிலும் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. தற்போது அவசரப்படாமல் நல்ல கதைகளை தேர்வு செய்து வருகிறேன். ரசிகர்களின் வரவேற்பை கருத்தில் கொண்டு அடுத்தடுத்த படங்களை ஒப்புக்கொள்ள விரும்புகிறேன்,” என்றார்.

ஏஜென்ட் ‘டினா’ தான் இன்ஸ்பிரேஷன்

மேலும் அவர் கூறுகையில், “இந்த ஆண்டில் மட்டும் எனது நடிப்பில் 5 முதல் 6 திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கிறேன். ‘பிளாஸ்ட்’ படத்திற்காக கராத்தே பயிற்சி பெற்றேன். ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்தேன். குறிப்பாக, ‘விக்ரம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஏஜென்ட் டினா கதாபாத்திரம் எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்தது,” என்று தெரிவித்துள்ளார்.

பிரீத்தி முகுந்தனின் இந்தப் பேச்சு, அவரது திரைப்பயணத்தின் மீதான அர்ப்பணிப்பையும், ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com