

பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும் இயக்குநருமான அபிஷேக் நாமா இயக்கியுள்ள ‘நாகபந்தம்’ என்ற பான் இந்தியத் திரைப்படத்தில் விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா மற்றும் பி.எஸ். அவினாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த மர்மத் திரில்லர் படத்தில் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கிறார். நடிகை நபா நடேஷ் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழை தொடர்ந்து தெலுங்கில் நடித்துவரும் ஐஸ்வர்யா மேனன் ‘நாகபந்தம்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
‘நாகபந்தம்’ படத்தின் டீசரை மகா சிவராத்திரி நாளில் மகேஷ்பாபு வெளியிட்டிருந்தார். பர்ஸ்ட் சிங்கிளான ‘நமோ ரே’ பாடலை சவுந்தர்ராஜன் வரிகளில் ஹரிப்ரியா பாடியிருந்தார். இப்படத்தின் செகண்ட் சிங்கிள் ‘சுர சுர’ பாடலை மோகன் ரஞ்சன் வரிகளில்எஸ்பி அபிஷேக், சரத் சந்தோஷ், அனிலா ராஜீவ், பிருந்தா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சாமி கோயில், பொக்கிஷம், மர்மம், நாக பந்தம், பிரம்ம கமலம், சிவன் ஆகிய பின்னணியில் இந்த கதை உருவாகிறது.
சென்னையில் நடந்த இந்த படவிழாவில் தயாரிப்பாளர் தாணு பேசுகையில், “நாகபந்தம் படத்தின் காட்சிகளைப் பார்த்தபோது பிரமாண்டம் கண்ணெதிரே தோன்றியது. நாகம் என்றாலே மக்களிடையே ஒரு தனி ஈர்ப்பும், நம்பிக்கையும், ஆன்மிகத் தொடர்பும் இருக்கிறது. நாகத்தை மையமாக வைத்து உருவான பல படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. நாகக் கன்னிகை, நாக தேவதை கதைகள் முதல் பல படைப்புகள் வரை, நாகத்தின் மீது மக்களுக்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு உள்ளது. அந்த வகையில், 'நாகபந்தம்' திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.
இந்நிலையில், ‘நாகபந்தம்’ படத்தின் ‘வீர நாதம்’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் ஜூலை 3ம் தேதி வெளியாகிறது.