’அனுமன் அருளால் கிடைத்த வாய்ப்பு’ - நடிகை அஞ்சலி அரோரா நெகிழ்ச்சி

அபிஷேக் சிங் இயக்கியுள்ள ‘ஸ்ரீ ராமாயண கதா’ திரைப்படத்தில் அஞ்சலி அரோரா சீதையாக நடித்துள்ளார்.
அஞ்சலி அரோரா
Published on

மும்பை,

‘ஸ்ரீ ராமாயண் கதா’ என்ற புதிய புராணத் திரைப்படத்தில் சீதா தேவியாக நடிக்கவுள்ள நடிகை அஞ்சலி அரோரா, இந்த கதாபாத்திரம் தனக்கு அனுமனின் அருளால் கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.

‘ஸ்ரீ ராமாயண கதா’

அபிஷேக் சிங் இயக்கும் ‘ஸ்ரீ ராமாயண கதா’ திரைப்படத்தில் தேவ் சர்மா ஸ்ரீ ராமராகவும், அஞ்சலி அரோரா சீதா தேவியாகவும், ரஜனீஷ் துக்கால் ராவணனாகவும் நடிக்கின்றனர். மேலும், ஷீல் வர்மா லட்சுமணனாகவும், நிர்பய் வாத்வா அனுமனாகவும் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 25-ந் தேதி வெளியாக உள்ளது.

கடவுளின் அருள்

இந்நிலையில், சீதா தேவியாக நடிப்பது குறித்து அஞ்சலி அரோரா அளித்த பேட்டியில் கூறியதாவது:

“எனக்கு இந்த கதாபாத்திரத்தை வழங்குவது குறித்து இயக்குநர் என்னிடம் பேசினார். அப்போது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட எனது புகைப்படம் ஒன்றை அவர் காட்டினார். அதை பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.

‘சார், இது உண்மையிலேயே நான்தானா?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘ஆமாம், இது நீங்கள்தான்’ என்றார்.

‘சார், நான் இதை செய்வேன் என்று நீங்கள் உண்மையிலேயே நினைக்கிறீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நிச்சயமாக நீங்கள் செய்வீர்கள்’ என்று கூறினார்.

அதன்பிறகு நான் சிறிது நேரம் யோசித்தேன். இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கிறது என்றால், அது கடவுளின் அருளாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.

அனுமன் கோவிலுக்கு செல்வேன்

நான் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அனுமன் கோவிலுக்குச் செல்வேன். எனக்கு எது உரியதோ, அது எனக்கு கிடைக்க வேண்டும் என்று எப்போதும் வேண்டிக்கொள்வேன். எனவே, அனுமனின் அருளால்தான் இந்த கதாபாத்திரம் எனக்கு கிடைத்துள்ளது என்று உணர்ந்தேன்.

சீதையின் குணங்கள்

சீதா தேவியின் ஒவ்வொரு குணத்தையும் முழுமையாக வெளிப்படுத்த முயன்றுள்ளேன். இருந்தாலும் திரையரங்கில் படத்தைப் பார்க்கும்போது, அந்த முயற்சி எந்த அளவுக்கு சிறப்பாக வந்துள்ளது என்பதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு நடிகரும் தங்களால் முடிந்த சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவார்கள். அதை ஏற்றுக்கொள்வதும், நிராகரிப்பதும் ரசிகர்களின் கைகளில்தான் உள்ளது.

ஒரு நடிகராக, நமக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு எந்த அளவுக்கு நியாயம் செய்கிறோம் என்பது மட்டுமே நம் கையில் உள்ளது” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com