கடவுளை கிண்டல் செய்த விவகாரம்: சாமுண்டீஸ்வரி அம்மன் முன்பு மன்னிப்பு கோரிய ரன்வீர்சிங்

தெய்வா கடவுள் குறித்து அவதூறாக விமர்சிக்கவில்லை என்றும், அந்த நிகழ்வுக்காக தான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் கூறி வேண்டினார்.
கடவுளை கிண்டல் செய்த விவகாரம்: சாமுண்டீஸ்வரி அம்மன் முன்பு மன்னிப்பு கோரிய ரன்வீர்சிங்
Published on

மைசூரு,

கோவாவில் கடந்த ஆண்டு(2025) நவம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங், கன்னட நடிகர்கள் ரிஷப் ஷெட்டி முன்பே காந்தாரா படத்தில் வரும் 'தெய்வா' கடவுள் போன்று முகபாவனைகளை கிண்டலாக வைத்து, அந்த கடவுள் ஒரு பேய் என்று கூறியிருந்தார். இதற்கு தெய்வா கடவுளை வணங்கி வரும் துளு மொழி பேசும் மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கர்நாடக ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது நடிகர் ரன்வீர்சிங் சார்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்த விவகாரத்துக்காக தான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக நடிகர் ரன்வீர் சிங் தெரிவித்து இருந்தார்.

மன்னிப்பு கோரிய ரன்வீர்சிங்

அதை ஏற்ற கர்நாடக ஐகோர்ட்டு, நடிகர் ரன்வீர் சிங்கிற்கு எதிரான நடவடிக்கைகளை ரத்து செய்தது. மேலும் தெய்வா கடவுள் குறித்தும், கர்நாடக மக்களின் ஆன்மிக நம்பிக்கை குறித்தும் அறிந்து கொள்ள மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு செல்லுமாறு நடிகர் ரன்வீர்சிங்கிற்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பேரில் நேற்று மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு நடிகர் ரன்வீர்சிங் சென்றார். அவர் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். அப்போது தான் தெய்வா கடவுள் குறித்து அவதூறாக விமர்சிக்கவில்லை என்றும், அந்த நிகழ்வுக்காக தான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் கூறி வேண்டினார்.

கோவிலில் தியானம்

அப்போது அவருக்கு கோவில் தலைமை அர்ச்சகர் பிரசாதம் கொடுத்தார். அதை பெற்றுக் கொண்ட நடிகர் ரன்வீர்சிங் சிறிது நேரம் அம்மன் முன்பு அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகர் ரன்வீர்சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியான துரந்தர் மற்றும் துரந்தர்-2 ஆகிய 2 திரைப்படங்களும் உலக அளவில் சுமார் ரூ.4 ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் குவித்தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com