

சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தனுஷ், தென்னிந்திய சினிமாவைத் தாண்டி இந்தி திரைப்படங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55-வது திரைப்படத்தில் நடித்து வரும் அவர், தொடர்ந்து பல புதிய படைப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், தனுஷின் மூத்த மகனான யாத்ரா விரைவில் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான பேச்சுகள் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
யாத்ரா அறிமுகமாகும் திரைப்படத்தை நடிகர் தனுஷே தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் இளைஞர்களை கவரும் வகையில் முழுமையான வணிக அம்சங்களுடன் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கதை, திரைக்கதை மற்றும் பிற முக்கிய அம்சங்கள் குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், யாத்ராவுக்கு ஏற்ற கதைக்களத்தை தேர்வு செய்வதில் படக்குழு கவனம் செலுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மேலும், திரைப்படத்தை இயக்கவிருக்கும் இயக்குநர் யார், யாத்ராவுடன் இணைந்து நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் யார், தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்பது உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் தனுஷின் மகன் யாத்ரா திரையுலகில் அறிமுகமாகும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.