நடிகை கவுதமியின் புகார் எதிரொலி; 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

நடிகை கவுதமி அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது அமலாக்கத்துறையும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
நடிகை கவுதமியின் புகார் எதிரொலி; 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
Published on

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நடிகை கவுதமி, கடந்த 2023-ம் ஆண்டு தனது சொத்துகள் மோசடி செய்யப்பட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் தற்போது அமலாக்கத்துறையும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

சொத்து மோசடி குற்றச்சாட்டு

நடிகை கவுதமி அளித்த புகாரில், அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் தனது சொத்துக்களை மோசடி செய்து அபகரித்ததாக குற்றம்சாட்டியிருந்தார். இதனால் தனது அசையாச் சொத்துகளை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், தனது மகள் சிறு வயதில் இருந்தபோது, 2004-ம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அந்த சூழ்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருந்த சொத்துகளை விற்க முடிவு செய்ததாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

அமலாக்கத்துறை களமிறக்கம்

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் அழகப்பன் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது மனைவி உள்பட ஐந்து பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், வழக்கில் பணப்பரிவர்த்தனைகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான கோணங்களில் விசாரணை நடத்த அமலாக்கத்துறை களமிறங்கியுள்ளது. கவுதமி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட 7 வழக்குகளை மையமாக வைத்து, சென்னை, மதுரை உள்ளிட்ட 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர்.

இன்று காலை முதல் நடைபெற்ற இந்த சோதனை நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை குறித்து அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com