உண்மையில் அவர் கலைக்கு அரசன்தான் - நடிகை பிரியாலயா

நடிகை பிரியாலயா சிவராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "டிரெண்டிங்" படத்தில் நடித்துள்ளார்.
சென்னை,
சிவராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "டிரெண்டிங்". மீனாட்சி ஆனந்த் தயாரித்துள்ள இந்த படத்தில் கதாநாயகனாக கலையரசன், கதாநாயகியாக பிரியாலயா மற்றும் பிரேம்குமார், பெசன்ட் ரவி, வித்யா போர்கியா உள்பட பலர் நடித்து உள்ளனர்.
சோசியல் மீடியா குடும்பத்திற்குள் நுழைந்து எந்தளவு வாழ்க்கைக்குள் சிக்கல்களை உருவாக்குகிறது என்பதை பரபரப்பான சம்பவங்களுடன் அழுத்தமான திரில்லராக உருவாகி உள்ள இந்த படம் வருகிற 18-ந்தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி படத்தின் புரொமோஷன் விழா சென்னையில் நடந்தது.
அந்த விழாவில் பிரியாலயா பேசுகையில், "இப்படம் ஆடிசன் முடிந்த போது சந்தோசத்தை விட பயம் தான் அதிகம் இருந்தது. நடிப்புக்கு வாய்ப்பு உள்ள படம், கலையரசன் கூட நடிக்க வேண்டும். இது ஒரு எமோசனல் ரோலர் கோஸ்டர். படத்தில் நடித்தது உண்மையில் மிக நல்ல அனுபவம். பெயரிலேயே கலைக்கு அரசன் என வைத்துள்ளார். உண்மையில் அவர் கலைக்கு அரசன் தான். இப்படத்திற்கு சாம் சி.எஸ். மிக அற்புதமாக இசை அமைத்துள்ளார். இசையோடு படம் பார்க்க அருமையாக உள்ளது. அனைத்து கலைஞர்களும் மிகச்சிறப்பாக உழைத்துள்ளனர். சோஷியல் மீடியா யூஸ் பண்ற எல்லோரும் பார்க்க வேண்டிய படம்." இவ்வாறு அவர் பேசினார்.






