மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை ரசித்துப் பார்த்தேன் - சச்சின் தெண்டுல்கர்

‘மைக்கேல்’ திரைப்படத்தை மிகவும் ரசித்துப் பார்த்ததாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் குறிப்பிட்டார்.
மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை ரசித்துப் பார்த்தேன் - சச்சின் தெண்டுல்கர்
Published on: 

மறைந்த உலகப் புகழ்பெற்ற பாப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான ஹாலிவுட் திரைப்படம் ‘மைக்கேல்’. இந்தப் படத்தைப் பார்த்து ரசித்ததாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

சச்சின் பகிர்ந்த அனுபவம்

சமீபத்தில் சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய சச்சின் தெண்டுல்கரிடம், சமீபத்தில் திரையரங்கில் பார்த்த திரைப்படம் எது என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், ‘மைக்கேல்’ திரைப்படத்தை மிகவும் ரசித்துப் பார்த்ததாகக் குறிப்பிட்டார். மேலும், சிறுவயது முதலே மைக்கேல் ஜாக்சனின் பாடல்களைக் கேட்டு வளர்ந்ததாகவும், அவரது இசைக்கு ஈடு இணையே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மைக்கேல் ஜாக்சனாக நடித்த உறவினர்

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஆன்டோயின் ஃபுகுவா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஜான் லோகன் திரைக்கதை எழுதியுள்ளார். மைக்கேல் ஜாக்சனின் இசைப் பயணம், புகழின் உச்சத்தை அடைந்த விதம் உள்ளிட்ட அவரது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. மைக்கேல் ஜாக்சனின் சகோதரர்களுடன் இணைந்து ‘ஜாக்சன் 5’ இசைக்குழுவில் பயணித்த தொடக்கக் காலம் முதல், அவரது புகழ்பெற்ற ‘பேட்’ இசைச் சுற்றுப்பயணம் வரையிலான நிகழ்வுகள் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மைக்கேல் ஜாக்சனின் உறவினரான ஜாஃபர் ஜாக்சன், அவருடைய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிறுவயது மைக்கேல் ஜாக்சனாக ஜூலியானோ வால்டி நடித்துள்ளார். மேலும், கோல்மன் டொமிங்கோ, நியா லாங் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இப்படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

X