

சின்னத்திரையில் கலக்கி வந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி, வெள்ளித்திரைக்கு தாவினார். 'பயர்', 'எக்ஸ்டிரீம்' படங்களில் நடித்து கலக்கினார். ‘பயர்' படத்தில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பூட்டினார். தற்போது '99/66' என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் சின்னத்திரைக்கு செல்ல தயார் என்று ரச்சிதா மகாலட்சுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "அளவான படங்களில் நடித்தாலும், ஆனந்தமாக நடித்து வருகிறேன். கதாநாயகர்களுக்கு வெறும் ஜோடியாக மட்டும் வந்துபோக நான் விரும்பவில்லை. என் நடிப்புக்கு தீனி கிடைக்கவேண்டும். அந்த தீனி இல்லாத இடத்தில் என்னால் வேலை பார்க்க முடியாது.
என்னை வளர்த்தெடுத்த சின்னத்திரையை ரொம்ப 'மிஸ்' செய்கிறேன். சின்னத்திரை தொடரில் ஒப்புக்கொண்டு விட்டால், படங்களில் நடிக்க நேரம் இருக்காது. அப்படித்தான் தேடி வந்த படவாய்ப்புகளை எல்லாம் நிராகரித்தேன்.
இப்போதும் தமிழில் சின்னத்திரை வாய்ப்புகள் வந்தால் சந்தோஷமாக செல்வேன். ஏனெனில் அங்கு என் நடிப்புக்கு தீனி அதிகமாகவே கிடைக்கும். ஒரு நல்ல நடிகர் - நடிகைகளுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் சின்னத்திரையில் கிடைத்துவிடும். வெள்ளித்திரையில் போட்டி அதிகம் என்பதால், இந்த விஷயங்கள் எல்லாம் கொஞ்சம் குறைவு. அவ்வளவுதான்" என்றார்.