

தடைகளைத் தாண்டி மாணவர்கள் பெறும் ஒவ்வொரு வெற்றியும் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கமாக அமையும் என்று நடிகர் சிவகுமார் கூறியுள்ளார்.
1979 ஆம் ஆண்டு திரைக்கலைஞர் சிவகுமாரின் 100-வது திரைப்படத்திற்காக பெற்ற முழுச் சம்பளமான ரூ.25,000-ஐ வங்கியில் முதலீடு செய்து, அதன் வட்டித் தொகையைக் கொண்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில், பின்னர் நடிகர் சிவகுமாரின் சொந்த நிதியில் இருந்து உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. 2006 ஆம் ஆண்டு முதல் ‘அகரம் பவுண்டேஷன்’ இந்த அறக்கட்டளையின் பொறுப்பை முழுமையாக ஏற்று, ஆண்டுதோறும் உதவித்தொகைகளையும் விருதுகளையும் வழங்கி வருகிறது.
47-வது ஆண்டு விழாவில் +2 முடித்து கல்லூரி சேர்ந்திருக்கும் 25 மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவியும், மூத்த ஓவியர் ஒருவருக்கு நிதியும், விருதும், விளிம்புநிலை மக்களின் கல்வி மேம்பாட்டிற்காகத் தன்னலமற்று உழைத்து வரும் மூன்று முக்கிய அமைப்புகளுக்கு நிதியுதவியும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.
பொருளாதாரச் சவால்களையும் பல்வேறு தடைகளையும் கடந்து, பிளஸ் டூ பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் சேர்ந்துள்ள 25 மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.2,50,000 கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. மாணவர்களின் சாதனையைப் பாராட்டி, அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
விழாவில் மாணவர்களைப் பாராட்டி, பேசிய திரைக்கலைஞர் சிவகுமார், “மாணவ - மாணவிகளுக்கு நான் சொல்கிற ஒரே ஒரு விஷயம், கல்வியும் ஒழுக்கமும் இருந்தால், உலகத்திலே எந்த மூலையில் போய் வேண்டும் என்றாலும் நீங்கள் சாதிக்க முடியும். உங்களுக்குக் கல்வியும் ஒழுக்கமும் இருந்தால், உலகத்திலே எந்த மூலையிலும் போய் சாதிக்க முடியும் என்பதை நீங்கள் மனதில் புரிந்து கொள்ளுங்கள்.
கிராமப்புறங்களில் ஏழ்மையான குடும்பங்களில் பிறந்து வளர்ந்து, கல்வி கற்பதற்காக மாணவர்கள் எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். கல்வி ஒருவருடைய வாழ்க்கைத் தரத்தை எந்த அளவுக்கு உயர்த்த முடியும் என்பதையும் நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். என்னைப் போலவே ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, நன்றாகப் படித்து முன்னேறத் துடிக்கும் மாணவர்களுக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்வதில் எனக்கு மிகுந்த மனநிறைவு கிடைக்கிறது.
தடைகளைத் தாண்டி அவர்கள் பெறும் ஒவ்வொரு வெற்றியும் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கமாக அமையும். இந்த பயணத்தில் உங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி மட்டுமே. இனி கடக்க வேண்டிய பாதை இன்னும் நீண்டது. மாணவர்கள் தங்களுடைய இலக்கில் உறுதியாக இருந்து, ஒழுக்கத்துடன், கவனம் சிதறாமல் தொடர்ந்து உழைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். கல்வி தரும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி, தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். கவனம் சிதறாமல் தொடர்ந்து உழைத்து சமூகத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும்” என்றார்.