“கில்லர்” படப்பிடிப்பு தள விபத்து: எஸ்.ஜே.சூர்யா ரூ.15 லட்சம் நிதியுதவி

எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘கில்லர்’ படப்பிடிப்பின் போது கேஸ் பலூன் வெடித்த விபத்தில் ஒருவர் பலியானார்.
“கில்லர்” படப்பிடிப்பு தள விபத்து: எஸ்.ஜே.சூர்யா ரூ.15 லட்சம் நிதியுதவி
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், இயக்குனரான எஸ்.ஜே.சூர்யா தற்போது 'கில்லர்' என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பிரீத்தி அஸ்ராணி நடிக்கிறார். பல ஆண்டுகளுக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்து வரும் படம் இதுவாகும். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்திற்கான பூஜை கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த நிலையில், படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சென்னை பெரம்பூர் பின்னி மில் வளாகத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.

வெடிகுண்டு வெடிப்பு மற்றும் புகைமூட்டம் இடம்பெறும் ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இதற்காக கார்பன் டை ஆக்சைடு நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தன. படப்பிடிப்பு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு, ஒரு சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இந்த விபத்தில் சிலிண்டர் அருகே பணியாற்றிக் கொண்டிருந்த 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் மதுரவாயலை சேர்ந்த மதன் (25) சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தினகரன், சூர்யா மற்றும் சக்திவேல் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக கியாஸ் சப்ளை ஒப்பந்ததாரர் ராமு மற்றும் படப்பிடிப்பு தள பொறுப்பாளர் ஆறுமுகம் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்தியதாக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து ஓட்டேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ‘கில்லர்’ படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்த மதன் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்த சூர்யா என்பவருக்கு ரூ.5 லட்சமும் நிதியுதவியாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா சார்பாக வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com