

சென்னை,
செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய தமிழ் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. திரைப்படத் துறையில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தமிழக அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.
தமிழ் திரையுலகில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக சென்னையில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் திரைப்படங்களின் வெளியீடு தொடர்பான விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் முடிவில், வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய தமிழ் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், புதிதாக வெளியாகும் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிட்ட 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையையும் தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திரையரங்க வெளியீட்டுக்கும் ஓடிடி வெளியீட்டுக்கும் இடையிலான கால இடைவெளி தொடர்பாக தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதுமட்டுமின்றி, வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய திரைப்படங்களின் படப்பிடிப்புகளையும் நடத்துவதில்லை என சங்கம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
திரைப்படத் துறையில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தமிழக அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.