

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார், கார் பந்தய வீரராகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு பிறகு கார் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற தனது சொந்த பந்தய அணியையும் தொடங்கினார்.
இந்த அணி துபாய், பெல்ஜியம், ஸ்பெயின், அபுதாபி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது. தொடர்ந்து பல முக்கிய ரேசிங் தொடர்களிலும் அஜித்குமார் அணி கலந்து கொண்டு வருகிறது.
சமீபத்தில் பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற 24எச் சீரிஸ் ஜிடி3 ப்ரோ-ஏஎம் (24H Series GT3 Pro -AM) என்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் ரேஸிங் அணி 2ம் இடம்பிடித்து அசத்தியது.
இதையடுத்து ரசிகர்களுக்கு நன்றி கூறி அஜித் போட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில், ’உங்களது பிரார்த்தனைகளும் ஆதரவும் இன்றி இந்த வெற்றிகள் (podiums) சாத்தியமில்லை. உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். இது நிச்சயமாக எங்களின் எல்லைகளைக் கடந்து இன்னும் சிறப்பாகச் செயல்பட எங்களை ஊக்கப்படுத்துகிறது’ என்று தெரிவித்திருக்கிறார்.