

சென்னை,
1977-ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாரதிராஜா, தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி போன்ற முன்னணி நட்சத்திரங்களை இயக்கி கவனம் பெற்றார். கிராமிய பின்னணியில் பல வெற்றிப் படங்களை உருவாக்கி "இயக்குனர் இமயம்" என்று போற்றப்பட்ட பாராதிராஜா, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இயக்குனர் பாரதிராஜா சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாராதிராஜாவின் மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் சிபி சத்யராஜ் தனது எக்ஸ் தளத்தில் பாரதிராஜாவிற்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், " பாரதிராஜா சார் அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகுந்த துயருற்றேன். ஐயா, உங்கள் திரைப்படங்கள் திரைப்பட உருவாக்கக் கலைக்கான ஒரு சிறந்த பாடப்புத்தகமாகத் திகழ்ந்தன. கிராமப்புறத் தமிழகத்தின் ஆன்மாவைத் திரையில் கொண்டு வந்த நீங்கள், தமிழ் சினிமாவின் போக்கையே என்றென்றும் மாற்றியமைத்தீர்கள். திரைத்துறைக்கு இது ஒரு பேரிழப்பு. அன்பிற்குரிய ஐயாவே, உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்." என்று தெரிவித்துள்ளார்.
நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ள பதிவில், "கதை சொல்லும் முறையையே என்றென்றும் மாற்றியமைத்த ஒரு திரைப்பட ஆளுமை. தமிழ் சினிமாவிற்கு மனதை நெகிழ வைக்கும், மண்ணின் மணத்தோடு கூடிய மிகச்சிறந்த காவியங்களை பாரதிராஜா சார் வழங்கியுள்ளார். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது .அந்த மாபெரும் கலைஞரின் ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி." என்று தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். வெளியிட்டுள்ள பதிவில், "பாரதிராஜா சார், உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். கிராமப்புறத் தமிழகத்தின் ஆன்மாவை வெள்ளித்திரைக்குக் கொண்டுவந்த உங்கள் திரைப்படங்கள், பல தலைமுறைத் திரைப்படப் படைப்பாளிகளையும் ரசிகர்களையும் ஒருசேர ஊக்கப்படுத்தின. காலத்தால் அழியாத உங்கள் கதை சொல்லும் பாணியின் மூலமும், மறக்க முடியாத கதாபாத்திரங்களின் மூலமும் உங்கள் புகழ் என்றும் நிலைத்திருக்கும். நீங்கள் மறைந்தாலும், என்றும் எங்கள் நினைவில் வாழ்வீர்கள்." என்று தெரிவித்துள்ளார்.
இயக்குனர் அஜய் ஞானமுத்து வெளியிட்டுள்ள பதிவில், "அன்பிற்குரிய ஜாம்பவான் பாரதிராஜா சார், உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். தமிழ் சினிமா இருக்கும் வரை நீங்களும் உங்கள் காலத்தால் அழியாத படைப்புகளும் என்றும் நிலைத்திருந்து, பல தலைமுறையினருக்கு உத்வேகம் அளிப்பீர்கள்! நீங்கள் தான் மிகச்சிறந்தவர் (G.O.A.T)!" என்று தெரிவித்துள்ளார்.