

சென்னை,
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கடந்த மாதம் நடந்தது. அதில் நடுத்தர மற்றும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு, அதில் நடிக்கும் நடிகர்கள் வருவாய் பகிர்வு அடிப்படையில் சம்பளம் பெற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் மீதான கவன ஈர்ப்புக்காக ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. காலையில் தொடங்கி மாலை வரை நடைபெற்ற இந்த வேலைநிறுத்தத்தால், உள்ளூர் மற்றும் வெளியூர்களில் நடைபெற்ற 30-க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.
இதில் சூர்யா, சிம்பு, விஜய்சேதுபதி, விஷால், விஜய் ஆண்டனி உள்ளிட்ட நடிகர்களின் படங்களும் அடங்கும். படப்பிடிப்பு ரத்து காரணமாக ஒரு நாளில் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு சுமார் 7 ஆயிரம் பெப்சி தொழிலாளர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டனர்.