‘ராமாயணா’ படத்திற்கு ராம்லீலா அமைப்பு எதிர்ப்பு; ரிலீசுக்கு முன் சிறப்புக் காட்சி கோரிக்கை

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளது.

‘ராமாயணா’ படத்திற்கு ராம்லீலா அமைப்பு எதிர்ப்பு; ரிலீசுக்கு முன் சிறப்புக் காட்சி கோரிக்கை
Published on

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. படத்தில் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், படத்தை வெளியீட்டுக்கு முன்பாக தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என்று 'ஸ்ரீ ராம்லீலா மகாசங்' அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பிரம்மாண்டமாக உருவாகும் 'ராமாயணா'

வால்மீகி எழுதிய ராமாயணம் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் மற்றும் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்து வருகின்றனர்.

டிரெய்லருக்கு அமோக வரவேற்பு

சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸ், டீசர் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக பிரம்மாண்டமான விஷுவல் எபெக்ட்ஸ், பின்னணி இசை, கதாபாத்திரங்களின் தோற்றம் மற்றும் காட்சியமைப்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மேலும் அதிகரித்தது.

ராமர் கதாபாத்திரம் குறித்து சர்ச்சை

டிரெய்லர் வெளியான பிறகு, சமூக வலைதளங்களில் படம் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தன. குறிப்பாக, ராமர் கதாபாத்திரம் பலவீனமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சிலர் குற்றம்சாட்டி விமர்சனங்களை முன்வைத்தனர்.

'முதலில் எங்களுக்கு படத்தை திரையிட்டு காட்டுங்கள்'

இந்த நிலையில், 'ஸ்ரீ ராம்லீலா மகாசங்' அமைப்பு தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தக்கூடிய காட்சிகள் படத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், படத்தை வெளியீட்டுக்கு முன்பாக தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தங்களது கோரிக்கையை தயாரிப்பு நிறுவனம் ஏற்காவிட்டால், 'ராமாயணா' திரைப்படம் வெளியாகும் திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படக்குழு தரப்பில் இருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com