

கேரளாவில் பிரபல ராப் பாடகராக வலம் வருபவர் ஹிரன்தாஸ் முரளி என்கிற வேடன். இளம் பாடகரானஇவர் வேடன் என்கிற பெயரிலே தொடர்ந்து இயங்கி வருகிறார். முதலில் சுயாதீன ராப் பாடகராக தனது கரியரை தொடங்கிய இவர் 2020ஆம் ஆண்டு ‘வாய்ஸ் ஆப் வாய்ஸ்லெஸ்’ என்ற ஆல்பத்தை வெளியிட்டிருந்தார். இதை இவரே எழுதி பாடியிருக்கையில், தான் கடந்து வந்த பாதை, சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் பல்வேறு அரசியல் விஷயங்களை பேசியிருந்தார். இவரது தந்தை கேரளத்தை சேர்தவர் என்றும் தாய் இலங்கையை சேர்ந்த தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
முதல் ஆல்பம் மூலம் இசை ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற இவர் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘மஞ்சுமல்ல பாய்ஸ்’ படத்தில், ‘குத்தந்திரம்’ பாடல் மூலம் வெகுஜன ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இதன் மூலம் பிரபலமும் ஆன இவர் இப்போது தொடர்ந்து முன்னணி நடிகர் படங்களில் பணியாற்றி வருகிறார். அவரது பாடல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது நேரடி இசை நிகழ்ச்சிக்கு சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்க்கிறது. அந்தளவிற்கு புகழ் பெற்று விளங்குகிறார்.‘நரிவேட்டை’ படத்திலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பைசன்’ படத்திலும் பாடியிருந்தார்.
சமீபத்தில், பாடகர் வேடன் தனது நீண்ட நாள் காதலியான எழுத்தாளர் நவமி லதாவை பதிவுத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த மார்ச் 26ம் தேதி கர்நாடகத்தின் துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரின் இல்லத்தில் அவரை பாடகர் வேடன் நேரில் சந்தித்து உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.