ஓடிடி வெளியீட்டில் பாராட்டுகளை பெறும் ரத்னகுமாரின் “29” படம்

ரத்னகுமார் இயக்கிய ‘29’ திரைப்படம் ஓடிடி வெளியீட்டிற்குப் பின் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
ஓடிடி வெளியீட்டில் பாராட்டுகளை பெறும் ரத்னகுமாரின் “29” படம்
Published on

இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் காதல் திரைப்படமாக உருவான ‘29’ திரைப்படம், கடந்த மே 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

கதாநாயகனாக விது நடிக்க, நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்திருந்த இந்தப் படத்தில் இடம்பெற்ற சான் ரோல்டனின் பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. ஆனால், திரையரங்குகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

விது, கார்த்திக் சுப்புராஜின்‘ரெட்ரோ’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற ‘மேன்சன் குத்து’ பாடல் வைரலானது. கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் 'ஜி-ஸ்குவாட்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தது.

இயக்குநர் ரத்ன குமாரின் ‘29’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த 5ம் தேதி வெளியானது.

ஓடிடியில் வெளியான பின் ‘29’ திரைப்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். 10 பகுதிகளாக பிரிக்கப்பட்ட இப்படம் 29 வயதான இளைஞனின் வாழ்க்கைப் போராட்டத்துடன் காதலும் இணையும் போது பலரது வாழ்க்கையுடன் தொடர்பு கொள்ள முடிவதாகவும் வசதியான குடும்பப் பின்னணியில் இல்லாமல் தனக்கான அடையாளத்தை அடையும் முனைப்பு என பல காட்சிகளை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

முக்கியமாக, முழுமையாக படம் சிறப்பான அனுபவமாக மாறவில்லை என்றாலும் கதைக்கான காட்சிகளும் அதன் வசன தருணங்களும் சிறப்பாக இருந்ததாக பதிவிட்டு வருகின்றனர். இதனைக் கண்ட இயக்குநர் ரத்னகுமார், “29 படம் கொண்டாடப்படுவதை உணர முடிகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

2017-ம் ஆண்டு வெளியான‘மேயாத மான்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் ரத்ன குமார். இதன்பின் இவர் 'ஆடை', 'குலுகுலு' போன்ற படங்களை இயக்கியுள்ளார். மேலும் 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com