

நடிகர் விஜய்யை வைத்து ‘வாரிசு’ திரைப்படத்தை இயக்கியவர் வம்சி பைடிபல்லி. படத்தின் பாடல்கள் நன்றாக இருந்தாலும் கதையாக கலவையான விமர்சனங்களைப் பெற்று எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து, வம்சி அடுத்த திரைப்படத்திற்கான பேச்சு வார்த்தைகளில் இருந்தார்.
சல்மான் கான் இறுதியாக நடித்த ‘சிக்கந்தர்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது. சல்மான்கானே இத்தோல்விக்கு காரணம் என ஏ. ஆர். முருகதாஸ் கூறியிருந்தார். ஷாருக்கான், அமீர்கானை விட சல்மான் கானுக்குத்தான் பாலிவுட்டில் ரசிகர்கள் அதிகம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தனது ரசிகர் வட்டத்தை அதிகளவில் சல்மான் கான் இழந்து வரக் காரணமே இயக்குநர்களையும் படங்களையும் அவர் தேர்வு செய்யும் விதம் தான் எனக் கூறுகின்றனர். படம் வெளியாவதற்கு முன்னதாக சல்மான் கானை இயக்குநர்கள் புகழ்வதும், வெளியான பின்னர், அவரை வைத்து ஷூட்டிங்கே பண்ண முடியாது என புலம்புவதும் தொடர்கதையாக மாறியுள்ளது. மகேஷ் பாபுவுக்கு மகரிஷி படத்தைக் கொடுத்து வெற்றி கண்ட தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில்தான் சல்மான் கான் நடிக்க உள்ளார்.
நடிகர் சல்மான் கான் வம்சி கூட்டணி புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தை தில் ராஜுதயாரிக்க உள்ளார். படத்தின் டைட்டில் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்தப் படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதற்கு முன் பாலிவுட்டில் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், வம்சி பைடிபல்லி இயக்கத்தில் சல்மான் கான், நயன்தாரா நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.