

திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள பல பிரபலங்கள் இன்று செப்டம்பர் 10-ம் தேதி பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். அந்த வகையில் நடிகை அபர்ணா தாஸ், இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகர் அதுல் குல்கர்னி, பாடகி சின்மயி, நடிகர் ரவி மோகன் மற்றும் நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் இன்று பிறந்தநாள் காணுகின்றனர்.
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் கவனம் பெற்றுவரும் நடிகை அபர்ணா தாஸ், 1995-ம் ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி பிறந்தவர். ‘நான் பிரகாஷன்’ படத்தின் மூலம் மலையாளத்திலும், ‘பீஸ்ட்’ படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமான இவர், ‘டாடா’ திரைப்படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
பாலிவுட்டில் தனித்துவமான திரைப்படங்களை உருவாக்கிய இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப், 1972-ம் ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி பிறந்தவர். ‘சத்யா’ படத்தின் மூலம் எழுத்தாளராக முக்கிய கவனம் பெற்ற இவர், ‘கேங்ஸ் ஆஃப் வாசேபூர்’, ‘ராமன் ராகவ் 2.0’, ‘மன்மர்சியான்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனக்கென ஒரு பாணியை உருவாக்கியுள்ளார்.
இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ள அதுல் குல்கர்னி, 1965-ம் ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி பிறந்தவர். ‘ஹே ராம்’, ‘சாந்தினி பார்’, ‘ரங் தே பசந்தி’ உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர், சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
பாடகி மற்றும் டப்பிங் கலைஞரான சின்மயி ஸ்ரீபாதா, 1984-ம் ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி பிறந்தவர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ள இவர், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி மோகன், 1980-ம் ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி பிறந்தவர். ‘ஜெயம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், ‘எம்.குமரன் S/O மகாலட்சுமி’, ‘உனக்கும் எனக்கும்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான மஞ்சு வாரியர், செப்டம்பர் 10-ம் தேதி 1978ம் ஆண்டு பிறந்தவர். ‘சல்லாபம்’, ‘ஆறாம் தம்புரான்’, ‘கண்ணெழுதி பொட்டும் தொட்டு’ உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ?’ படத்தின் மூலம் திரையுலகில் மீண்டும் சிறப்பான வரவேற்பைப் பெற்றார். தமிழில் ‘அசுரன்’, ‘துணிவு’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
திரையுலகில் சாதித்து வரும் இந்த பிரபலங்களுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.