“நடிகராக இருந்தபோது காட்டிய அதே அன்பு இப்போதும் உள்ளது”- எம்.எஸ். பாஸ்கர் நெகிழ்ச்சி

நடிகர் எம்.எஸ். பாஸ்கர் சமீபத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து பேசினார்.
“நடிகராக இருந்தபோது காட்டிய அதே அன்பு இப்போதும் உள்ளது”- எம்.எஸ். பாஸ்கர் நெகிழ்ச்சி
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலில் வென்று விஜய்யின் தவெக ஆட்சியை பிடித்துள்ளது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் முதல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள். நேரில் சந்தித்தும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருவதையும் பார்க்க முடிகிறது. விஜய் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர் என்பதால், திரைத்துறையில் அவருடன் நெருங்கி பழகிய இயக்குனர்கள், சக நடிகர்கள் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகர் எம்.எஸ். பாஸ்கர் சமீபத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

20 நிமிடங்கள் நீண்ட சந்திப்பு

முதல்வர் விஜய்யை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எஸ். பாஸ்கர், “விஜய்யை இரண்டு நிமிடங்கள் மட்டுமே சந்திக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், எங்களது சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது. ‘பார்க்கிங்’ திரைப்படத்தில் எனது நடிப்பை விஜய் பாராட்டியதுடன், தேசிய விருது பெற்றதற்கும் வாழ்த்து தெரிவித்தார்” என்றார்.

அதே அன்பையும் மரியாதையையும்

மேலும் அவர் கூறுகையில், “என் மனைவி விஜய்யின் தீவிர ரசிகை. தேர்தலில் தவெக முன்னிலை பெற்ற செய்தி வந்தபோது, அவர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினார் என்று விஜய்யிடம் தெரிவித்தேன். இதைக் கேட்ட உடனே, என் மனைவியுடன் விஜய் தொலைபேசியில் பேசினார்.

நடிகராக இருந்தபோது என்னிடம் காட்டிய அதே அன்பையும் மரியாதையையும், இன்று முதல்-அமைச்சராக இருந்தும் விஜய் காட்டியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com