“29” படத்தின் கதை பேஸ்புக் போஸ்ட்டில் இருந்து உருவானது - இயக்குனர் ரத்ன குமார்

ரத்ன குமார் இயக்கத்தில் விது, ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ள ‘29’ படம் மே 8ம் தேதி வெளியாகவுள்ளது.
“29” படத்தின் கதை  பேஸ்புக் போஸ்ட்டில் இருந்து உருவானது - இயக்குனர் ரத்ன குமார்
Published on

சென்னை,

2017-ம் ஆண்டு வெளியான 'மேயாத மான்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் ரத்ன குமார். இதன்பின் இவர் 'ஆடை', 'குலுகுலு' போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். மேலும் 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியுள்ளார்.

தற்போது, கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் 'ஜி-ஸ்குவாட்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் '29' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகனாக ‘ரெட்ரோ’ படத்தில் வில்லனாக நடித்த விது நடித்துள்ளார். கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ் பிரேம்குமார் உள்பட பலர் நடித்து உள்ளனர். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ‘29’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய படத்தின் இயக்குநர் ரத்னகுமார், “இந்தப் பக்கம் 'கர' அந்தப் பக்கம் 'கருப்பு' ஆகிய படங்களுக்கு இடையே என்னுடைய படம் வெளியாவது எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இதனை நான் தயாரிப்பாளரிடம் சொன்னேன். 'இந்தப் படம் கோடை விடுமுறை நாட்களில், வார நாட்களில் வெளியாவதால், இளைஞர்களின் விடுமுறை காலத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும்' என்று சொன்னார். இதற்கு முன்பு 2017-ல் எனது 'மேயாத மான்' படம் வெளியானபோது, விஜய்யின் மெர்சல் படத்துடன் மோதியது. ஆனால், இது ஒரு தனித்துவமான சவாலாக இருக்கிறது. இந்த ‘29’ படம் நான் எழுதிய சாதாரண பேஸ்புக் போஸ்ட்டில் இருந்து உருவான கதைதான்.

பேஸ்புக்கில் 'வாட்ஸ் இன் மைண்ட்' என்றுதான் ஒரு விஷயத்தை போஸ்ட் செய்தேன். என் ரூமில் மழையின் சத்தம் மட்டும்தான் கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு குடையில் ஒரு பையனும் பெண்ணும் நின்று கொண்டிருக்கிறார்கள். மழை பெய்து கொண்டிருக்கிறது. அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்ற ரீதியில் ஓர் உரையாடலை எழுதி, போஸ்ட் செய்தேன். மறுநாள் அதற்கு ஏகப்பட்ட லைக்ஸ், கமெண்ட்ஸ் வந்திருந்தது . அதில் 'அந்த இரண்டு கேரக்டர் அதற்குப் பிறகு என்ன செய்தார்கள். என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்' என்று சிலர் பதிவிட்டனர். அப்போது அந்த கேரக்டருக்கு நான் பெயர் கூட வைக்கவில்லை. ஏனென்றால் அதை வாசிக்கும் ஒவ்வொருவரும் தங்களை நினைத்து கொள்வார்கள் என்று விட்டுவிட்டேன். சரி என்று மற்றொரு நாள் அவர்கள் அடுத்ததாக எங்கே சந்தித்து இருப்பார்கள் என்று ஓர் இடத்தை தேர்வு செய்தேன். அதுதான் இப்போது நீங்கள் இங்கு பார்த்த கிளிம்ப்ஸ். இதைத்தான் நான் இரண்டாவது முறையாக எழுதி பேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன். எனக்குள் தோன்றியதை பேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன்.

அப்போது ஒரு நண்பர் எனக்கு போன் செய்து எதுக்கு இப்போது நீ பேஸ்புக்கில் இப்படி போஸ்ட் ஏன் போடுகிறாய்? இதற்குள் ஒரு நல்ல கதை இருக்கிறது. இரண்டு கேரக்டர்ஸ் ஒரு சிறிய குட்டி ஸ்பேஸ்க்குள் கனெக்ட் பண்ண முடிகிறது. இதனை ஒரு படமாக உருவாக்கலாம். நீ உருவாக்கவில்லை என்றால்... வேறு யாரேனும் இதனை படமாக உருவாக்கி விடுவார்கள். தயவு செய்து அதனை டெலீட் செய்து விடு' என்றார். இதேதான் நான் என்னுடைய ‘மது’ குறும்படத்தை யூடியூபில் போஸ்ட் செய்த போதும் நடந்தது. அந்த ‘மது’, ‘மேயாத மான்’ படமாக ஆனதை போல் பேஸ்புக்கில் போஸ்ட் போட்ட விஷயங்கள் தற்போது ‘29’ எனும் படமாக உங்களிடம் வந்திருக்கிறது. நான் கதை எழுத உட்கார்ந்தபோது என் மனதிற்குள் தோன்றிய இரண்டு கற்பனை கதாபாத்திரங்களின் பயணம் தான் இந்த படம்.

பேஸ்புக்கில் போட்ட போஸ்ட் தான் ஒரு கதை கதையாக உருவாகி நான் யாரு என்று கேட்டால் தெரியவில்லை என்று சொல்லும் அளவிற்கு நோக்கமே இல்லாத ஒரு 29 வயது பையன். அவருடைய வாழ்க்கையில் 20களில் இருக்கும் ஒரு பெண் வருகிறாள். அந்தப் பெண்ணும் அவனும் இணைந்து பயணிக்கும்போது தான் யார் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள். இது ஒரு படமாக தயாரானது. எனக்கு 29 வயதில் தான் நிறைய விஷயங்கள் நடந்ததால், இப்படத்தின் டைட்டில் ‘29’ என்பதாக இருக்க வேண்டும் என தீர்மானித்தேன். ‘29’ எனும் டைட்டிலை புரிய வைப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. இது டோர் நம்பரா, பஸ் நம்பரா, ஏதேனும் ஒரு நாளா, அதெல்லாம் இல்லை. இது வயது என குறிப்பிடுவதற்கு ஒரு போராட்டமே நடந்தது” என்று விவரித்துள்ளார் ரத்னகுமார். இப்படம் மே 8 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com