'வாரணாசி' படத்தில் என்னை நடிக்க வைத்ததால் ராஜமவுலிக்கு வந்த சிக்கல்: பிரகாஷ் ராஜ் பேச்சு

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரகாஷ் ராஜிடம், அவருக்கு எதிராக எழுந்து வரும் புறக்கணிப்பு கோரிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
'வாரணாசி' படத்தில் என்னை நடிக்க வைத்ததால் ராஜமவுலிக்கு வந்த சிக்கல்: பிரகாஷ் ராஜ் பேச்சு
Published on: 

'வாரணாசி' படத்தில் என்னை நடிக்க வைத்ததற்காக இயக்குநர் ராஜமவுலியிடம் எக்ஸ் தளத்தில் சிலர் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர் என பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள இவர், அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

தற்போது இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் 'வாரணாசி' திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவர் இடம்பெற்றிருப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், பிரகாஷ் ராஜ் நடிக்கும் திரைப்படங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

படங்களைப் புறக்கணிக்க வேண்டும் என எதிர்ப்பு

இதற்கிடையே, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரகாஷ் ராஜிடம், அவருக்கு எதிராக எழுந்து வரும் புறக்கணிப்பு கோரிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "நான் நடித்த 'கே.ஜி.எப்.' திரைப்படத்திலும் என்னை நடிக்க வைத்ததற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். என்னை அந்தப் படத்தில் நடிக்க வைத்தது குறித்து கேள்விகள் எழுப்பினார்கள். ஆனால், அந்தத் திரைப்படம் மிகப்பெரிய வசூலைப் பெற்றது.

என்னைத் தடை செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள். ஆனால், 'திரிஷ்யம் 3' திரைப்படமும் நல்ல வசூலைப் பெற்றது. திரைப்படங்களை யாரால் தடுக்க முடியும்? அதிகபட்சமாக நான் தயாரிக்கும் படங்களை வேண்டுமானால் அவர்களால் தடுக்க முடியும். நான் முதன்மையாக ஒரு நடிகர்" என்றார்.

ராஜமவுலியிடமும் கேள்வி எழுப்புகிறார்கள்

தொடர்ந்து 'வாரணாசி' திரைப்படம் குறித்துப் பேசிய அவர், "தற்போது நான் 'வாரணாசி' படத்தில் நடித்து வருகிறேன். அந்தப் படத்தில் என்னை நடிக்க வைத்ததற்காக இயக்குநர் ராஜமவுலியிடம் எக்ஸ் தளத்தில் சிலர் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஒரு திரைப்படத்தை யாரால் தடை செய்ய முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

பிரகாஷ் ராஜின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. ஏற்கனவே அவரது கருத்துகள் தொடர்பாகப் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், 'வாரணாசி' படத்தில் அவர் நடிப்பது குறித்த சர்ச்சையும் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

X