

மும்பை,
ஆக்சன் மற்றும் கிரைம் திரில்லர் பாணியில் உருவான 'இன்ஸ்பெக்டர் அவினாஷ்' (Inspector Avinash) வெப் தொடரின் இரண்டாம் பாகத்தில், பூனம் மிஸ்ரா என்ற கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார் ஊர்வசி ரவுத்தேலா.
இந்தத் தொடர் உத்தரப் பிரதேசத்தின் சூப்பர் காப் அவினாஷ் மிஸ்ராவின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரன்தீப் ஹுடா கதாநாயகனாக நடிக்கும் இந்தத் தொடரில், அவரது மனைவியாக ஊர்வசி ரவுத்தேலா நடிக்கிறார்.
இந்நிலையில், தனது கதாபாத்திரம் குறித்து ஊர்வசி ரவுத்தேலா பேசினார். அவர் பேசுகையில்,
"கிரைம் தொடர்களில் மக்கள் பெரும்பாலும் வன்முறை, அதிகாரம் அல்லது ஆக்சன் மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் அதற்கு அடியில் பயம், தனிமை மற்றும் தன்னைத்தானே தற்காத்துக் கொள்ளும் தேவை இருக்கும். எனது கதாபாத்திரம் அந்த உள்மனப் போராட்டத்தை மிக ஆழமாக வெளிப்படுத்தும்" என்றார்.
மேலும், "சில நேரங்களில் வலிமை என்பது ஆக்ரோஷத்தில் இல்லை. எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அமைதியாக தாங்கிக்கொண்டு, தன்னைக் கட்டுக்குள் வைத்திருப்பதில்தான் இருக்கிறது. அதுவே என்னை இந்த கதாபாத்திரத்தின் மீது ஈர்த்தது," என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
2023-ல் வெளியான இதன் முதல் பாகத்தை நீரஜ் பதக் இயக்கியிருந்தார். இதில் அமித் சியால், ஷாலின் பானோட் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். தற்போது உருவாகியுள்ள இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.