

இயக்குநரும், தயாரிப்பாளருமான தக்காளி சீனிவாசன் (73) உடல் நலக்குறைவால் பெங்களூரூவில் காலமானார். 1980-களில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என வலம் வந்தவர், தக்காளி சீனிவாசன்.
திகில் மற்றும் கொலைக் குற்றங்கள் தொடர்பான மர்மக்கதைகளை தயாரித்து பிரபலமான தக்காளி சீனிவாசன், இவர்கள் வருங்காலத் தூண்கள், மனசுக்குள் மத்தாப்பு, நாளைய மனிதன், அதிசய மனிதன் போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். ஜென்ம நட்சத்திரம், விட்னஸ், அசோக வனம், அடுத்தது ஆகிய படங்களையும் இயக்கியுள்ள இவர், நாளைய மனிதன், அதிசய மனிதன், ஜென்ம நட்சத்திரம், பிட்னஸ் என சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார்.
கமல்ஹாசனின் சூரசம்ஹாரம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ள தக்காளி சீனிவாசன் பெங்களூரில் வசித்து வந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அதற்காக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலமானார். அவர் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது இறுதிச் சடங்குகள் நேற்று பெங்களூரில் நடைபெற்றது.