

சென்னை,
இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் 'போடா போடி' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருந்தாலும் நானும் ரவுடி தான் என்ற படம்தான் விக்னேஷ் சிவனுக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. இவர் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதைத் தொடர்ந்து சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது 'எல்.ஐ.கே.' (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் லவ் டுடே படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் தயாரிக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோவை ஈஷா யோகா மையத்தில் ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் தொடங்கியது.
இதற்கிடையே தனது படத்தின் தலைப்பை விக்னேஷ் சிவன் பயன்படுத்தி உள்ளதாக இயக்குனர் எஸ்.எஸ்.குமரன் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். மேலும் எல்.ஐ.சி நிறுவனம் படத்தின் பெயரை மாற்றக் கோரி செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் பின்னணி வேலைகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.
பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியானது. இப்படப்பிடிப்பில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக சீமான் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
View this post on Instagram
இந்த நிலையில், 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுக்கான முதல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அவர் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி கட்டடத்திற்குமேல் கையில் ஒரு வாட்ச் போன்ற ஒன்றை வைத்து அமர்ந்து இருக்கிறார்.