விஷ்ணு விஷாலின் “கட்டா குஸ்தி 2” படத்தின் “மகராசி” வீடியோ பாடல் வெளியானது

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘கட்டா குஸ்தி 2’ படம் வரும் ஜூலை 3ம் தேதி வெளியாகவுள்ளது.
விஷ்ணு விஷாலின் “கட்டா குஸ்தி 2” படத்தின் “மகராசி” வீடியோ பாடல் வெளியானது
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷ்ணு விஷால் . கடந்த 2022ம் ஆண்டு விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோரின் நடிப்பில் ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்கி இருந்தார். இவர் விஷ்ணு விஷாலின் ‘சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்’ படத்தை ஏற்கனவே இயக்கியிருந்தார். காமெடி கலந்த கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.30 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது.

இப்படத்தின் இயக்குனர் செல்லா அய்யாவுடன் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் கைகோர்த்து ‘கட்டா குஸ்தி 2’ படத்தை இயக்கியுள்ளார். இதனை விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. முதல் பாகத்தை போல படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் கருணாகரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

‘கட்டா குஸ்தி 2’ படத்தின் அறிமுக போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ராஜ ராஜேஸ்வரி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படக்குழு இவர் இம்பாக்ட் பிளேயராக நடித்துள்ளதாக கூறியுள்ளது. மேலும் நடிகர்கள் யோகி பாபு, கருணாகரன், நடிகை மோக்ஷா ஆகியோர் புதிதாக இப்படத்தில் இணைந்துள்ளனர். படம் விளையாட்டு சம்பந்தப்பட்டது என்பதால் சுவாரசியம் கூடியிருக்கிறது. ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

‘கட்டா குஸ்தி 2’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் விஷ்ணு - லட்சுமி தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகள் இருப்பதுபோல் அவர்களின் குடும்ப வாழ்க்கையைச் சுற்றிக் கதை பின்னப்பட்டுள்ளது. இம்முறையும் நகைச்சுவை, சமூக, குடும்ப விமர்சனம் என்கிற அம்சத்தையே மையப்படுத்தியிருப்பதாக இயக்குநர் கூறுகிறார்.

‘கட்டா குஸ்தி 2’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘சம்பவக்காரி’ பாடல் வெளியாகி வைரலானது. இப்பாடலை மோகன் ராஜன் வரிகளில் ஷான் ரோல்டன், சைந்தவி இணைந்து பாடியுள்ளனர்.

இந்த நிலையில், ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் செகண்டு சிங்கிளான ‘மகராசி’ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை முத்தமிழ் வரிகளில் விஜய் நாராயண், ஷான் ரோல்டன் இணைந்து பாடியுள்ளனர். இப்படம் வரும் ஜூலை 3ம் தேதி வெளியாகவுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com