

இயக்குநர் விக்னேஷ் சிவன் ‘போடா போடி’ படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். 2012-ம் ஆண்டு வெளியான ‘போடா போடி’ தோல்வி அடைந்ததை அடுத்து மூன்று வருடங்கள் திரைப்படம் இயக்காமல் இருந்தார். அதனையடுத்து ‘நானும் ரௌடிதான்’ படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில் உருவான அப்படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். இதன் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக மாறினார் விக்னேஷ்.அடுத்தடுத்து சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’, விஜய் சேதுபதியுடன் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்து பின்னர் அது பறிபோனது.
தற்போது பிரதீப் ரங்கநாதனுடன் கூட்டணி அமைத்து ‘எல்ஐகே’ படத்தை இயக்கியுள்ளார். இதில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் புரோமோஷன் பணிகள் விக்னேஷ் சிவன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் புரோமோஷன் பேட்டியில் தனுஷ் உடனான நட்பு குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறுகையில், “நடிகர் தனுஷை எனக்கு மிகவும் பிடிக்கும். நடிகர் என்பதை தாண்டி அவரை நான் உச்சத்தில் வைத்திருக்கிறேன். ஜூலை 28-ம் தேதிதான் தனுஷுக்கு பிறந்த நாள். அதே ஜூலை 28-ல் தான் என்னுடைய அப்பா இறந்தார். தனுஷுடத்தில் என்னுடைய அப்பாவை நான் உணர்கிறேன்.
தனுஷ் உடனான என்னுடைய நட்பு முறிவை என்னுடைய மிகப்பெரிய இழப்பாக பார்க்கிறேன். அதே சமயம் நல்ல நட்பு உறவுடன் இருக்கும் ஒருவரை நாம் இழக்கிறோம் என்றால் அதை அவமானமாகவும் பார்க்கிறேன். ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு தவறை செய்திருக்கிறேன். இன்று நான் இப்படி ஒரு இடத்தில் இங்கே இருக்கிறேன் என்றால், அதற்கு காரணம் தனுஷ். என்னுடைய இந்த நிலைக்கு அவர் முக்கியமான காரணம். ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் படப்பிடிப்பின்போது 2 வருடங்களுக்கும் மேல் அவருடன் தான் இருந்திருக்கிறேன்” என பேசியுள்ளார்.