

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள புதிய படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே). இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டு பகுதிகளில் நடைபெற்று முழுமையடைந்துள்ளது. பேன்டஸி காதல் கதைக்களத்தில் உருவான இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 18, அக்டோபர் 17, டிசம்பர் 18 ஆகிய தேதிகள் வெளியீட்டு நாள்களாக அறிவிக்கப்பட்டாலும், படம் வெளியாகவில்லை.
படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது அதன் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் வருகிற பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு, 12 அல்லது 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.