'17 ஹீரோக்கள் மறுத்த பிறகுதான் என்னிடம் வந்தது'... 'ராட்சசன்' ரகசியம் உடைத்த விஷ்ணு விஷால்

ராட்சசன்' திரைப்படம் 17 கதாநாயகர்களால் நிராகரிக்கப்பட்ட பிறகுதான் என்னிடம் வந்தது என விஷ்ணு விஷால் கூறினார்.

'17 ஹீரோக்கள் மறுத்த பிறகுதான் என்னிடம் வந்தது'... 'ராட்சசன்' ரகசியம் உடைத்த விஷ்ணு விஷால்
Published on

சென்னை,

இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் நடிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளியான 'ராட்சசன்' திரைப்படம், தமிழ் சினிமாவின் சிறந்த சஸ்பென்ஸ்-த்ரில்லர் படங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. சைக்கோ கொலைகாரனை மையமாகக் கொண்டு உருவான இப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்று, விஷ்ணு விஷாலின் திரைப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

தற்போது, சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட விஷ்ணு விஷால், 'ராட்சசன்' திரைப்படத்தில் தனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

17 ஹீரோக்கள் நிராகரித்த பிறகுதான் வாய்ப்பு கிடைத்தது

அந்த பேட்டியில் அவர் கூறுகையில், "'ராட்சசன்' திரைப்படம் 17 கதாநாயகர்களால் நிராகரிக்கப்பட்ட பிறகுதான் என்னிடம் வந்தது. கதையைக் கேட்டதும் உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால், நான் சம்மதித்த பிறகும், இயக்குநர் ராம்குமார் என்னுடன் பணியாற்ற விரும்பாத ஒரு தயாரிப்பாளருடன் இணைந்து, நடிகர் ஜெய்யை கதாநாயகனாக அறிவித்தார். அது எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது" என்றார்.

எப்போதும் மாற்றுத் தேர்வாகவே இருந்தேன்

தொடர்ந்து பேசிய அவர், "ஜெய்யை வைத்து அந்தப் படம் தொடங்கப்படவில்லை. அதன் பிறகு ராம்குமார் மீண்டும் என்னை அணுகினார். அப்போது, எல்லோருக்கும் நான் ஒரு 'மாற்றுத் தேர்வாக' (Backup) மட்டுமே இருக்கிறேனோ என்ற வருத்தம் எனக்குள் இருந்தது. இருப்பினும், ராம்குமார் மீது எனக்கு எந்தக் குறையும் இல்லை. 'இன்று நேற்று நாளை', 'முண்டாசுப்பட்டி', 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' ஆகிய படங்களிலும் ஆரம்பத்தில் நான் கதாநாயகனாக தேர்வு செய்யப்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

விஷ்ணு விஷாலின் இந்த வெளிப்படையான பேச்சு, சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆரம்பத்தில் பல சவால்களை சந்தித்தாலும், பின்னர் 'ராட்சசன்' திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com