2018 : சினிமா விமர்சனம்

கேரளாவில் 2018-ல் பெய்த பெரு மழை வெள்ளத்தை வைத்து தயாராகி உள்ள படம்.
2018 : சினிமா விமர்சனம்
Published on

ராணுவ பணி பிடிக்காமல் ஊருக்கு ஓடி வந்த டோவினோ தாமஸ் ஆசிரியை மஞ்சுவை காதலிக்கிறார். லால் மற்றும் அவரது மகன் நரேன் மீன்பிடி தொழில் செய்கிறார்கள். இன்னொரு மகன் ஆசிப் அலி மாடலிங் ஆசையில் திரிகிறார்.

தமிழ்நாட்டில் இருந்து கலையரசன் லாரியில் கேரளாவில் உள்ள சமூக விரோத கும்பலுக்கு வெடிகுண்டு எடுத்துச் செல்கிறார். இயற்கை இடர்பாடு நிவாரண மையத்தில் பணியாற்றுகிறார் குஞ்சாக்கோ போபன். செய்தி சேனலில் அபர்ணா பாலமுரளி வேலை செய்கிறார்.

இவர்கள் அத்தனை பேரும் மழை வெள்ளத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் கதை.

டோவினோ தாமஸ் கதையை உணர்ந்து நடித்துள்ளார். வெள்ள நிவாரண முகாமில் தவிக்கும் கர்ப்பிணி பெண்ணையும், அவர் குழந்தையையும் ஹெலிகாப்டரில் ஏற்றி விடுவது அவரது கதாபாத்திரத்துக்கு வலுசேர்க்கிறது. கிளைமாக்சில் பரிதாபம் அள்ளுகிறார்.

மஞ்சு அழகான காதலி. கணவனை பிரியும் நிலையில் இருந்த மனைவி பிறகு அவரோடு சேர முடிவு எடுப்பது ஜீவன். லால், நரேன் படகுகளுடன் சென்று வெள்ளத்தில் சிக்கும் மக்களை மீட்டு கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

முரட்டுத்தனமாக வரும் கலையரசன் திருந்தி வெடிகுண்டுகளை வெள்ளத்தில் வீசுவதும், அம்மாவுக்கு போன் செய்து பேசுவதும் அழகு. குஞ்சக்கோ போபன், அபர்ணா பாலமுரளி தேர்ந்த நடிப்பை கொடுத்துள்ளனர். ஆரம்பத்தில் தொடர்பு இல்லாமல் வரும் காட்சிகள் சலிப்பை தந்தாலும் போகப்போக விறுவிறுப்புக்கு மாறுகிறது.

வில்லியம் பிரான்சிஸ் இசை காட்சிகளில் ஒன்ற வைக்கிறது. அகில் ஜார்ஜின் கேமரா வெள்ள பயங்கரத்தையும், மக்கள் படும் கஷ்டங்களையும் நேர்த்தியாக படம் பிடித்து உள்ளது.

மழை வெள்ள பின்னணியில் சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தத்ரூபமாக காட்சிப்படுத்தி தரமான படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப். வெள்ள பாதிப்பில் உதவி செய்யும் ஒவ்வொரு மனிதரும் ஹீரோவாக தெரிவது படத்தின் பலம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com