நாடுகள் கடந்து நடனக்கலை வளர்க்கும் ஜெயந்தி யோகராஜா


நாடுகள் கடந்து நடனக்கலை வளர்க்கும் ஜெயந்தி யோகராஜா
x
தினத்தந்தி 20 Aug 2023 1:30 AM GMT (Updated: 20 Aug 2023 1:30 AM GMT)

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் திரிவண்ணம் எனும் நிகழ்ச்சியில், புதிதாக 'சரஸ்வதி சபதம்' எழுதி அரங்கேற்றினேன். மகாபாரதத்தில் உள்ள அம்பை, அம்பிகா, அம்பாலிகா கதாபாத்திரங்களை கொண்டு பெண்ணின் மனவலிமை எனும் நாட்டிய நாடகத்தை தயாரித்தேன்.

லங்கையில் பிறந்து இங்கிலாந்தில் வசிக்கும் முனைவர் ஜெயந்தி யோகராஜா, நடன ஆசிரியர், நுண்கலைப் பேராசிரியர், மூத்த தேர்வாளர் என பன்முகத்திறமை கொண்டவர். 5 வயதிலேயே பரத நாட்டியத்தை குரு ஸ்ரீமதி லீலா, மதுரை ஆறுமுகத்திடம் கற்கத் தொடங்கினார். 13 வயதில் இலங்கை யாழ்ப்பாணத்தில் 'வீரசிங்கம்' மண்டபத்தில் அரங்கேற்றத்தை நிகழ்த்தினார்.

'குச்சுப்புடி' புகழ் நரசிம்மாச்சாரியார், 'மோகினி ஆட்டம்' புகழ் கலா மண்டபம் சீதா வாரியார் ஆகியோரிடம் ஆடல் கலையை பயின்றுள்ளார். நுண்கலையில் முனைவர் பட்டம் பெற்ற ஜெயந்தி யோகராஜா வீணை, வயலின் ஆகிய இசைக்கருவிகளை வாசிக்கும் திறமை பெற்றவர். இங்கிலாந்தில் உள்ள சலங்கை நர்த்தனாலயா அகாடமியின் இயக்குநராகவும், கிரிபின் கல்லூரி நடனத்துறை தலைவராகவும் உள்ளார். நெதர்லாந்து, ஜெர்மனியில் உள்ள பள்ளிகளில் நாட்டிய ஆசிரியராக பணியாற்றியவர்.

ராஜஸ்தானில் அகில இந்திய நாட்டிய சங்கத்தில் 'வாழ்நாள் சாதனையாளர் விருது' பெற்றுள்ள இவர், இங்கிலாந்து பவன் அறக்கட்டளை சார்பில் 'நிருத்யோபாசனா விருது', 'நாட்டிய கலா நர்த்தகி', 'நாட்டிய விசாரத்', 'நாட்டிய கலா சாரதி', ராஜேஸ்வர நர்த்தகி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். அவரிடம் பேசியதில் இருந்து...

கவின் கலை வடிவமான நாட்டியத்தை மாணவர்களிடம் எவ்வகையில் கொண்டு சேர்க்கிறீர்கள்?

எனது லண்டன் நாட்டியப் பள்ளியில் பல நாட்டு மாணவர்களும் கற்கிறார்கள். மனநலம் குன்றிய மாணவர்களுக்கும் கற்பித்தேன். நெதர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் நாட்டியப்பள்ளி நடத்தி வருகிறேன். இப்போது எனது முன்னாள் மாணவர்கள் அங்கே நடன ஆசிரியராக உள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் திரிவண்ணம் எனும் நிகழ்ச்சியில், புதிதாக 'சரஸ்வதி சபதம்' எழுதி அரங்கேற்றினேன். மகாபாரதத்தில் உள்ள அம்பை, அம்பிகா, அம்பாலிகா கதாபாத்திரங்களை கொண்டு பெண்ணின் மனவலிமை எனும் நாட்டிய நாடகத்தை தயாரித்தேன். இங்கிலாந்து பாரதிய வித்யாபவனில் சரஸ்வதம் பிரவாஹம்-2023 என்ற நிகழ்ச்சியை நடத்தினேன். இன்னும் பல நிகழ்ச்சிகளின் மூலம் நாட்டியக் கலையை அனைவருக்கும் சேர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

லண்டனில் ஆங்கிலேயர்கள் நமது நடனத்திற்கு கொடுக்கும் அங்கீகாரம் எப்படி உள்ளது?

நமது கலை, கலாசாரத்தை அந்நாட்டில் உள்ள பலரும் மதிக்கின்றனர், அதற்கு ஏற்ற மரியாதையை கொடுக்கின்றனர். இங்குள்ள சில ஆங்கிலப் பள்ளிகளில்கூட நமது நடனம் ஒரு பாடமாக உள்ளது. சில இடங்களில் பயிற்சி பட்டறைகள் நடத்தியுள்ளேன். லண்டனில் உள்ள புகழ்பெற்ற அறிவியல் அருங்காட்சியகத்தில் பல ஆங்கிலேயர்களுக்கு நடனம் கற்றுக் கொடுத்துள்ளேன்.

நீங்கள் எழுதிய நூல்கள் பற்றி சொல்லுங்கள்..

"பரத இலக்கணம்" என்னும் நூலை தமிழ், டச்சு மொழிகளிலும், "நாட்டிய விலாசம்" என்னும் நூலை தமிழ், ஆங்கில மொழிகளிலும் வெளியிட்டுள்ளேன். பல மொழிகளில் நூல்கள் இருப்பதால், அதற்கு உலகளாவிய அந்தஸ்து கிடைக்கிறது. மாணவர்களும் சுலபமாக படிக்கும் வகையில் இந்நூலில் நடன நிலைகளை கோடுகள் மூலம் வரைந்து காட்டியிருக்கிறேன்.


Next Story